வாட்ஸ்அப் குழு அமைத்து மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேர் சிக்கினர்: ரூ.50 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல்

சென்னை: வாட்ஸ்அப் குழு அமைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஆவடி அருகே காட்டூர் 400 அடி சாலை அருகே நேற்று முன்தினம் இரவு  ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே 2 பைக்குகளில் வந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் மடக்கி, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், ஏராளமான வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது.

விசாரணையில் இவர்கள், அம்பத்தூர் எஸ்டேட் அடுத்த அத்திப்பட்டு  பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (25), மதுரவாயல், தனலட்சுமி நகரை சேர்ந்த  விக்னேஸ்வரன் (22), அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (22) என்பதும், இவர்கள் மூவரும் வலி நிவாரணி மாத்திரைகளை மொத்தமாக வாங்கி, அதை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரையாக விற்பனை செய்து வந்ததும், இதற்கென தனியாக வாட்ஸ்அப் குழு அமைத்து இருந்ததும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: