உதவி செய்து ஏமாறும் பொதுமக்கள் சென்னையில் அதிகரிக்கும் வாட்ஸ்அப் ஸ்கேம்: தெரியாதவர்களிடம் செல்போனை தர வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை

சென்னை: அறிவியல் வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளால் எந்த அளவுக்கு மக்களுக்கு நன்மை கிடைக்கிறதோ, அந்தளவுக்கு குற்றங்களும் பெருகி வருகின்றன. ஸ்மார்ட் போன், ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு சைபர் கிரைம் போலீசார் 24 மணி நேரமும் வேலை செய்யக்கூடிய சூழ்நிலை வந்துவிட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான புகார்கள் வந்து குவிக்கின்றன. ஒவ்வொரு பொதுமக்களும் தாங்கள் எப்படி ஏமாந்தோம், எவ்வாறு ஏமாற்றப்பட்டோம் என்பதை விளக்கிக் கூறும்போது, அந்த தவறு எப்படி நடந்தது என்பதை கண்டுபிடிப்பதற்குள், மோசடி கும்பல் ஒரு குறிப்பிட்ட நபர்களின் பணத்தை ஏமாற்றிவிட்டு வேறு பகுதிக்கு சென்று விடுகின்றனர். எவ்வளவு தான் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும், ஏதாவது ஒரு சின்ன சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் ஏமார்ந்து விடுகின்றனர்.

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் மோசடி கும்பல், தங்களது வேலையை கணக்கச்சிதமாக முடித்துவிட்டு செல்கின்றது. இன்றைய சூழலில் ஒரு மோசடியை தடுப்பதற்குள் அடுத்த மோசடி என பல்வேறு வகைகளில் மோசடி கும்பல் பொதுமக்களின் பணத்தை நூதன முறையில் அபேஸ் செய்து வருகிறது. உங்கள் செல்போன் எண்ணிற்கு ஓடிபி வந்துள்ளது, எனக்கு வரவேண்டிய ஓடிபி தவறுதலாக உங்களுக்கு வந்துவிட்டது, அதை சற்று கூறுங்கள் எனக்கு கூறி பலரிடம் மோசடி செய்த கும்பல் போலவே, தற்போது சற்று மாற்றி யோசித்து நேரடியாகவே களத்தில் இறங்கி பொதுமக்களிடம் உதவி கேட்பது போல நடித்து, உதவி செய்பவரின் வாட்ஸ்அப் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்று தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்கின்றனர், என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

சென்னையில், சமீப காலமாக இதுபோன்ற புகார்கள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு, தாம்பரத்தைச் சேர்ந்த ஹேமந்த் என்பவர், கோயம்பேடு வரை பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது அருகில் இருந்த நபர், அவசரமாக ஒருவரை தொடர்பு கொள்ள வேண்டும். எனது செல்போனில் பேலன்ஸ் இல்லை, என்று கூறி ஹேமந்திடம்  செல்போனை கேட்டுள்ளார். ஹேமந்த் செல்போனை கொடுத்துவிட்டு, அருகில் இருந்த தனது நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். 3 நிமிடங்களில் பேசி முடித்து அந்த நபர் செல்போனை கொடுத்துவிட்டு நன்றி என கூறிவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு 2, 3 நாட்கள் கழித்து தொடர்ந்து ஹேமந்துக்கு போன் செய்த நபர்கள், வாட்ஸ்அப் குரூப்பில் ஒருவரை இணைத்துள்ளாயே அது யார் என கேட்டுள்ளனர். இது போன்று பல கால்கள் ஹேமத்துக்கு வந்துள்ளன. மேலும், அவரது பேஸ்புக்கிலும் சிலர் புதிதாக சேர்ந்துள்ளனர். ஆனால் ஹேமந்த் யாரையும் சேர்க்கவில்லை. அதன் பிறகு ஒரு வழக்கறிஞர் போன் செய்து, உங்களது செல்போனிலிருந்து அதிகப்படியான மெசேஜ் வருகிறது, என்று கூறியுள்ளார். நான் அப்படி ஏதும் மெசேஜ் அனுப்பவில்லையே என கூறிய ஹேமந்த் இதுபற்றி விசாரித்தபோது, தொடர்ந்து இதுபோல் பலர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கமிஷனர் அலுவலகத்தில் இதுபற்றி புகார் கொடுத்த ஹேமந்த், அதற்கான ஒப்புதல் சீட்டையும் பெற்றுக் கொண்டு வந்துவிட்டார். அதன் பிறகு பிரச்னை முடிந்தது என நினைத்திருந்த அவருக்கு, 3 மாதம் கழித்து மீண்டும் வெளிநாட்டில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், உங்களை நம்பி நான் வெளிநாட்டிற்கு வந்துள்ளேன். நீங்கள் கொடுத்த எந்த ஒரு தொலைபேசி எண்ணும் வேலை செய்யவில்லை. உங்களை நம்பி ரூ.3 லட்சம் செலுத்தி உள்ளேன், எனக் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ஹேமந்த், தான் ஏற்கனவே புகார் கொடுத்த விஷயத்தை கூறியுள்ளார். மீண்டும், கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர், போலீசார் விசாரிக்கும் போது ஹேமந்தின் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டு, அதை வேறு ஒருவர் பயன்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது. 3 மாதத்திற்கு முன்பு பேருந்தில் ஒருவர் போன் செய்துவிட்டு தருகிறேன் என்று கூறிய நபர், ஹேமந்த் வாட்ஸ்அப் செயலியை ‘லிங்க் டிவைஸ்’ அவரது செல்போனில் உள்ள வாட்ஸ்அப் செயலியுடன் இணைத்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் ஹேமந்த் அவரது வாட்ஸ்அப்பில் யாருடன் பேசுகிறார், சாட்டிங் செய்கிறார், அவருக்கு யாரெல்லாம் மெசேஜ் செய்கின்றனர் என்பதை கண்காணிப்பதுடன், அவரது வாட்ஸ்அப் எண்ணில் இருந்து அவரது நண்பர்கள் பலரிடம் உதவி கேட்பதுபோல் பணம் பறித்தது தெரிய வந்தது.

ஒரு உதவி செய்ததால், இவ்வாறு ஹேமந்த் சிக்கிக் கொண்டது 3 மாதத்திற்கு பின்பு தெரிய வந்தது. இதுபோன்று பலர் தற்போது வாட்ஸ்அப் ஹேக் எனப்படும் ஹேக்கர்களிடம் மாட்டிக் கொண்டு, தங்களது பணம் தனிநபர் பற்றிய விவரங்கள் உள்ளிட்ட பலவற்றை இழந்து வருகின்றனர். இதேபோல், வாட்ஸ்அப் என்றால் என்ன என்று தெரியாத ஒருவரும், சிறிய ரக செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். அவரது எண்ணை பெற்றுக்கொண்ட கும்பல், அவரது செல்போன் எண்ணை ஸ்மார்ட் போனில் செலுத்தி இவரது எண்ணிற்கு வந்த ஒடிபியை வைத்து வாட்ஸ் அப்பை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்கும்போது தான் இவரது எண்ணில் வாட்ஸ்அப் உள்ளதே குறிப்பிட்ட அந்த நபருக்கு தெரிய வந்துள்ளது. இவ்வாறு செல்போன் என்னை பயன்படுத்துபவர்களை ஏமாற்றி ரகசியமாக ஹேக்கர்கள் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே உதவி செய்யும்போது கவனம் வேண்டும். மேலும் முடிந்தவரை நாம் பயன்படுத்தும் செல்போனை எந்த அளவுக்கு பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும், என போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

Related Stories: