சேது சமுத்திர திட்டம் கொண்டு வந்தால் தமிழ்நாடு பொருளாதாரத்தில் பெரிய வளர்ச்சி அடையும்: அதிமுக, பாஜ உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் வரவேற்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று சேது சமுத்திர திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக, பாஜ உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் ஆதரித்து பேசினர். அதன் விபரம் வருமாறு:

தங்கம் தென்னரசு (தொழில் துறை அமைச்சர்): இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அன்றைய முதல்வர் கலைஞரால் கொண்டு வரப்பட்ட சிறந்த திட்டம் இது. தற்போதைய முதல்வர் அதற்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்டார். பின்னர் தனது நிலைபாட்டை மாற்றிக்கொண்டார் என்றனர். சேது சமுத்திரம் திட்டம் அமைக்கும் கடல்பகுதி நகரும் தன்மை கொண்டது என்று சுற்றுச்சூழல் அறிக்கை அளித்ததால் இந்த திட்டத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றார். திட்டம் வரவேற்கப்பட வேண்டியது.

பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக): ராமர் என்பது ஒரு கற்பனையான கதாபாத்திரம் என்று கூறுவது எங்கள் மனதை புண்படுத்துகிறது. 100 கோடி மக்களுக்கு மேல் ராமரை விழிபட்டு வருகிறார்கள். ராமர் என்பது அவதார புருஷர். மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கருத்து தெரிவித்தனர். அதனால் மீன்வர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிதிநிதிகளையும் அழைத்து கருத்து கேட்க வேண்டும். மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எந்த திட்டத்தையும் ஆதரிப்போம், செயல்படுத்துவோம்.

நயினார் நாகேந்திரன் (பாஜ): முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமா? எதிர்க்க வேண்டுமா? என்பது தான் பிரச்னை. ஆனால் ராமாயணம் கற்பனை கதை என்று இங்கு பேச வேண்டுமா. ராமரை நாங்கள் தெய்வமாக வழிபடுகிறோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: யாரும் ராமரை குறை சொல்லி பேசவில்லை. அவரை பயன்படுத்தி திட்டத்தை தடுத்துவிட்டார்கள் என்று தான் சொன்னார்கள்.

நயினார் நாகேந்திரன்: சேது சமுத்திர திட்டம் வந்தால் எங்களை விட யாரும் சந்தோஷப்பட முடியாது. காரணம் நான் தென் மாவட்டத்தை சேர்ந்தவன். ராமர் பாலத்திற்கு சேதம் இல்லாமல் இந்த திட்டத்தை நிறைவேற்றப்பட்டால் நாங்கள் வரவேற்கிறோம். இந்த திட்டத்தை பாஜ ஆதரிக்கிறது. மேலும், இந்த தீர்மானத்தை ஆதரித்து காங்கிரஸ் செல்வ பெருந்தகை, மார்க்சிஸ்ட் நகைமாலி, இந்திய கம்யூ. மாரிமுத்து,விசிக ஷா நவாஸ், மதிமுக சதன் திருமலைக்குமார், கொங்கு மக்கள் தேசிய  கட்சிஈ.ஆர்.ஈஸ்வரன் தமிழக வாழ்வுரிமை  கட்சி வேல்முருகன் உள்பட பலர் வரவேற்று பேசினர்.

Related Stories: