ஊராட்சி ஒன்றிய சாலைகளை தரம் உயர்த்த 10,000 கி.மீ. இலக்குடன் டெண்டர் பணி தீவிரம்: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

சென்னை: ஊராட்சி சாலைகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை தரம் உயர்த்த 10.000 கி,மீ இலக்கை அமைக்கப்பட்டு டெண்டர் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: நயினார் நாகேந்திரன் (பாஜக): பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவில் 10 சதவிகித இட ஒதுக்கீடு ஒன்றிய அரசால் கொடுக்கப்படுகிறது. அதனை அரசு மறுப்பதால் சென்னையில் உள்ள ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது தமிழக மாணவர்களுக்கு கிடைக்கவில்லை.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி:  நீங்கள் சொல்வதைப்போல, மத்தியில் உள்ள நிறுவனங்களிலும், தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நயினார் நாகேந்திரன்: மாநகராட்சிப் பகுதிக்குள் நெடுஞ்சாலைகள் வருகின்றன. சில இடங்களில் மாநகராட்சி சாலையாகவும் சில இடங்களில் நெடுஞ்சாலை சாலைகளாகவும் இருக்கின்றன. நெடுஞ்சாலைகளைப் பொறுத்தமட்டிலும், ஒன்று மாநகராட்சி சாலைகளாக இருக்கவேண்டும்; இல்லையென்றால், நெடுஞ்சாலைகளாகவே இருக்கவேண்டும். அதுபோல, கிராமப்புற சாலைக்கு போதுமான நிதியில்லாததால் சாலைகளைப் போட முடியவில்லை. நெடுஞ்சாலைத் துறை அந்தச் சாலைகளை தன்வசம் எடுத்துக்கொண்டு அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. நெடுஞ்சாலைத் துறையே அவற்றை எடுத்துக்கொண்டால், எல்லா கிராமச் சாலைகளும் நிச்சயமாகப் போடுவதற்கு வாய்ப்பாக அமையும்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு: ஆண்டுக்கு 2,000 கி.மீ என்ற அளவில் ஊராட்சி சாலைகளை, ஊராட்சி ஒன்றிய சாலைகளை தரம் உயர்த்த வேண்டுமென்ற அடிப்படையில், 10 ஆயிரம்  கி.மீட்டர் என இலக்கை அமைத்துக்கொண்டு, சென்ற நிதியாண்டில் 2 ஆயிரம் கி.மீட்டருக்கு  முதல்வர் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான டெண்டர் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தொடர்ந்து, ஆண்டுக்கு 2 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் என்ற அளவில், ஐந்து ஆண்டுகளுக்கும் 10,000 கிலோ மீட்டர் சாலைகள் எடுக்கப்படவிருக்கின்றன. அவை முழுக்க, முழுக்க, ஊராட்சி சாலைகள், ஊராட்சி ஒன்றியச் சாலைகள்தான். அந்தச் சாலைகள் எல்லாம் தரமாகப் போடப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Related Stories: