தமிழ்நாட்டில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள் துவக்க விழா 2030க்குள் 100 பில்லியன் பொருளாதாரம் அடைய தமிழ்நாடு அரசு நடவடிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை: சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஓசூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட ஆறு முக்கிய நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள் துவங்கப்பட்டுள்ளது. உலக அளவில் 100 பில்லியன் பொருளாதார இலக்கை அடைய தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கக்கூடிய வகையில் 25 லட்சம் இளைஞர்களை தயார் படுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். தமிழ்நாட்டில் கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஓசூர் மற்றும் வேலூர்  உள்ளிட்ட ஆறு முக்கிய நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தியாகராய நகரில் உள்ள ஜி.ஆர்.டி.கன்வென்ஷன் சென்டரில் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது: தமிழகத்தில் 5ஜி சேவை கொண்டு வர ஜியோ ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.40 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் 5ஜி அறிமுக சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு அன் லிமிடெட் டேட்டா  இன்டர்நெட் சேவை 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் எந்தவித கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படும்.  5 ஜி சேவை தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை மிக பெரிய வாய்ப்பு உள்ளது, தொழில்நுட்பம் வளர வளர இதன் மூலம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் ஜிடிபி உயரும். இந்த ஆண்டு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி மதிப்பிலான மென்பொருள் ஏற்றுமதி செய்துள்ளோம், இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளோம். தமிழகத்தில் புதிய மென்பொருள் நிறுவனங்களை மூன்றாவது மற்றும் நான்காம் கட்ட நகரங்களுக்கு எடுத்து செல்ல அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் நூறு பில்லியன் பொருளாதாரத்தை அடைய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் உலக அளவில் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்க கூடிய 25 லட்சம் இளைஞர்களை உருவாக்க வேண்டும். அதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மக்கள் தங்களுக்கு தேவையான அரசின் அனைத்து விதமாக அடையாள அட்டைகளையும் இணையதளம் மூலம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டு, தற்போது 235 விதமான துறைகளில் முழுமையாக கணினி மூலம் மக்களுக்கு தேவையான ஆவணங்களை பெற்றுக்கொள்ளவும் அரசு அதிகாரிகள் துறை குறித்து பதிவேற்றம் செய்யவும் உருவாக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். தொழில் நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல், ரிலையன்ஸ் நிறுவன தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: