ஐகோர்ட் மூத்த நீதிபதி பி.என்.பிரகாஷ் பணி ஓய்வு 52 பேராக குறைந்தது நீதிபதிகளின் எண்ணிக்கை

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி பி.என்.பிரகாஷ் நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு உயர் நீதிமன்றம் சார்பில் பிரிவு உபச்சார விழா நடந்தது. இந்த நிகழ்சியில் தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் பேசும்போது, கடந்த ஒன்பதரை ஆண்டு காலத்தில் 69 ஆயிரம் வழக்குகளை முடித்து வைத்திருக்கும் நீதிபதி பிரகாஷ், பணி ஓய்வு பெறுவதால் குற்றவியல் பிரிவில் நிபுணரை இந்த நீதிமன்றம் இழக்கிறது என்றார். இதையடுத்து, ஏற்புரையாற்றிய நீதிபதி பிரகாஷ், துப்பாக்கியுடன் செல்லும் உக்ரைனிலோ, அதிபருடன் மோதிக்கொள்ள வேண்டிய பாகிஸ்தானிலோ இல்லாமல் மக்களால் பாதுகாக்கப்படும் சிறந்த அரசியலமைப்பை கொண்டிருக்கும் இந்தியாவில் நீதிபதியாக பணியாற்றியது குறித்து பெருமிதம் அடைகிறேன்.

சக நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், பதிவுத்துறை பணியாளர்களும் சிறந்த ஒத்துழைப்பை வழங்கினர். ஓய்வுக்கு பிறகு சிறை கைதிகளுக்கு புத்தாக்க பயிற்சி அளிப்பது, ஏழை மாணவர்கள் தேர்வு தடைகளை தகர்த்தெறிய பயிற்றுவிப்பது என்று முடிவு செய்துள்ளேன். ஏதேனும் தவறிழைத்திருந்தால் வருந்துகிறேன். அதற்காக எனக்கு எதிராக பகைமை பாராட்ட வேண்டாம் என்றார். கடந்த 2013ம் ஆண்டு நியமிக்கப்பட்ட நீதிபதி பி.என்.பிரகாஷ் பணி ஓய்வு பெறுவதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகளின் எண்ணிக்கை 52 ஆக குறைகிறது. 23 காலியிடங்கள் உள்ளன.

Related Stories: