கொடநாடு கொலை வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வு குழு ஆத்தூரில் முகாம்: கனகராஜ் விபத்தில் சிக்கிய இடத்தில் ஆய்வு

ஆத்தூர்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஆத்தூரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த காவலாளி கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கில், சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவரான, சேலம் மாவட்டம் இடைப்பாடி சமுத்திரம் சித்திரைபாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர், ஆத்தூரில் 28.4.2017ல் மர்மமான முறையில் வாகன விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், இன்னும் வழக்கு முடிவுக்கு வரவில்லை.

இதனால், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு துறையினர் எஸ்.பி. மாதவன் தலைமையில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சிபிசிஐடி போலீசார், எஸ்டேட் மேலாளர் நடராஜ், காசாளர் மற்றும் கணக்கீட்டாளர்களிடம் விசாரணை நடத்தினர். சசிகலா உட்பட இதுவரை 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவினர், நேற்று ஆத்தூரில் விசாரணை நடத்தினர். 2 வாகனங்களில் வந்த குழுவினர், கனகராஜ் விபத்தில் சிக்கிய ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை சந்தனகிரி பிரிவு ரோடு பகுதியில் ஆய்வு செய்தனர். அப்பகுதியில் உள்ள கடைக்காரரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: