நாகர்கோவில் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் போட்டோக்களை வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் பதிவிடாதீர்கள்-மாணவிகளுக்கு போலீஸ் அறிவுரை

நாகர்கோவில் : செல்போனில் யாராவது தவறான எஸ்.எம்.எஸ். அனுப்பினால் உடனடியாக காவல்துறையிடம் புகார் அளித்திட வேண்டும். வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் தங்களது போட்டோக்களை மாணவிகள் பதிவிட வேண்டாம் என போலீசார் கூறி உள்ளனர். குமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் இடையே போதை பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள் குறித்து விளக்கும் வகையிலும், கஞ்சா, புகையிலை மற்றும் போதை ெபாருட்கள் விற்பனை தொடர்பாக மாணவ, மாணவிகளிடம் இருந்து தகவல்களை பெறும் வகையிலும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்கள், புகார் பெட்டிகள் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நாகர்கோவில் துணை போலீஸ் சரகத்துக்குட்பட்ட  பள்ளிகளில், டி.எஸ்.பி. நவீன்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், புகார் பெட்டிகள் தொடர்பான தகவல்களையும் விளக்கி வருகிறார்கள்.நாகர்கோவில் எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியில் வடசேரி காவல் நிலையம் சார்பில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். எஸ்.ஐ.க்கள் ஜெசி மேனகா, பாலசுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவிகள் மத்தியில் பேசினர். அப்போது போலீசார் கூறியதாவது :

தமிழ்நாட்டில் கஞ்சா, புகையிலை மற்றும் போதை ெபாருட்களை தடுக்கும் வகையில் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குமரி மாவட்டத்தில் எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் உத்தரவின் பேரில் பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைத்து உள்ளோம். போதை பொருட்கள் விற்பனை, பயன்படுத்துபவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் மாணவ, மாணவிகள் அந்த பெட்டியில் எழுதி தகவல் அளிக்கலாம். தகவல் கொடுப்பவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் தேவையில்லை.

தகவல் உண்மையானதா? என்பதை மட்டும் காவல்துறையினர் சோதனை செய்வார்கள். இதே போல் 7010363173 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். சைபர் க்ரைம் குற்றங்கள் நடந்தால் 1930 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சைபர் க்ரைம் குற்றங்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலம் பணம் திருடப்படுவது ஆகும். இந்த வகை குற்றவாளிகள் வெளி மாநிலங்களில் இருந்து ஆபரேட் செய்து பணத்தை திருடுவார்கள். உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இப்படி பணம் திருட்டு போனால் உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு டயல் செய்து தகவல் தெரிவிக்க வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவிகள் தங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் 1098க்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மாணவிகளுக்கு செல்போனில் யாராவது விரும்ப தகாத படங்கள், மெசேஜ், வீடியோக்கள் அனுப்பினால் எந்த வித தாமதமும் இல்லாமல் வீட்டில் உள்ள பெரியவர்களின் உதவியுடன் உடனடியாக காவல்துறையில் புகார் செய்ய வேண்டும். புகார் செய்ய தயங்கும் பட்சத்தில் அதை தவறு செய்பவர்கள் சாதகமாக்கி ெகாள்வார்கள். தேவையில்லாத வெப்சைட்டுகளை பார்க்க வேண்டாம். பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் போன்ற சமூக வலை தளங்களில் மாணவிகள் தங்களது புகைப்படங்களையோ, குடும்ப புகைப்படங்களையோ வெளியிட கூடாது. தெரியாத நபர்களிடம் இருந்து வரும் ப்ரண்ட் அழைப்புகளை ஏற்காதீர்கள். நீங்கள் எச்சரிகையாக இருந்தால் தான் தவறுகளை தடுக்க முடியும் என்றனர்.

Related Stories: