இது தமிழருடைய ஆட்சி தமிழர்களுக்காக நடைபெறக்கூடிய ஆட்சி: சென்னை கொளத்தூரில் பொங்கல் விழா கொண்டாடி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இது தமிழருடைய ஆட்சி. தமிழர்களுக்காக நடைபெறக்கூடிய ஆட்சியாக உள்ளது என சென்னை கொளத்தூரில் நடந்த பொங்கல் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், திமுக சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பொங்கல் விழாவை நேற்று மாலை கொண்டாடினார். அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவிகள் 100 பொங்கல் பானைகள் வைத்து கொண்டாடினர். முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினும் உடனிருந்தார்.

 

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிலும் 900 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, வீனஸ் பகுதியில் உள்ள எவர்வின் மேல்நிலைப்பள்ளியில் கட்சி நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள் என 2500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  கொளத்தூர் தொகு தியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 111.80 கோடி மதிப்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடித்தோம். கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே சிறிய அளவில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்பட்டது. தற்போது வரை இந்த அகாடமியில் 2591 பேர் பயனடைந்துள்ளனர். தற்போது 510 பேர் இதில் பயிற்சி பெற்று வருகின்றனர்.  

ஜல்லிக்கட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது. மாபெரும் தமிழ் சொற்பொழிவுகள் தொடங்க இருக்கிறது. திருவள்ளுவர் திருநாள் அன்று அவருடைய பெயரில தமிழ்பெருமக்கள் விருதுகள் எல்லாம் வழங்கப்பட இருக்கிறது. இப்படி தை மாதம் முழுக்க அரசின் சார்பிலும் பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் நம்முடைய கட்சியின் சார்பிலும் அந்த விழா இந்த மாதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது தமிழருடைய ஆட்சி. தமிழர்களுக்காக நடைபெறக்கூடிய ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது நம்முடைய பழம் பெருமையை மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட விழாக்களை நாம் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட விழாவில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்பிகள் கிரிராஜன், கலாநிதி வீராசாமி, சென்னை மேயர் பிரியா, கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: