நடிகர்கள் விஜய், அஜித் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள்: கலெக்டர், போலீஸ் ஆணையரிடம் கருத்து கேட்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படங்களுக்கான அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி தரலாமா என்பது குறித்து மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. சிறப்பு காட்சிகள் ரத்து என்று வரும் செய்திகள் தவறானது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு துணிவு, வாரிசு திரைப்படங்களுக்கான முன்பதிவு தொடங்கியது. இதில் அடுத்த ஒருவாரங்களுக்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்றுவிட்டன. இந்த படங்களுக்கான சிறப்பு காட்சிகள் அனுமதி வழங்கப்பட்டு, துணிவு திரைப்படம் நள்ளிரவு 1 மணிக்கும், வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கும் வெளியிடப்படும் என கூறப்பட்டது. மேலும், டிக்கெட் விற்பனையில் ரூ.2 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து தமிழ்நாடு வருவாய் மற்றும் மேலாண்மை இயக்குநர் செந்தாமரை திடீரென நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

 திரையங்கு வாசல்களில் திரைப்படங்களுக்கு மிக உயரமான கட் அவுட் வைக்ககூடாது. கட் அவுட்களில் பாலாபிஷேகம் செய்யக்கூடாது.

அதேபோல், அதிக விலைக்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தி வசூலித்தல், பார்க்கிங் கட்டணம் கூடுதலாக வசூல் செய்தது தொடர்பான புகார்கள் எழுந்தால் உடனடியாக அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திரையங்குகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவது தெரிந்தால் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் திரையரங்க நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், துணிவு, வாரிசு சிறப்பு காட்சிகளை தியேட்டர்களில் வெளியிடுவது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள், போலீஸ் கமிஷனர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. ஆனால், சிறப்பு காட்சிகள் ரத்து என்று வரும் தகவல்கள் தவறானது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: