தமிழக அரசால் எழுதிக் கொடுத்ததுதான் ஆளுநரின் உரை என்பது சொந்த உரை அல்ல: கனிமொழி எம்பி பேச்சு

தண்டையார்பேட்டை: ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திமுக மகளிர் அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு மாநில மகளிர் அணி இணை செயலாளர் குமரி விஜயகுமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி கலந்துகொண்டார். பெண்களின் நடன நிகழ்ச்சியும் நடந்தது.

நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசியதாவது: இந்த பொங்கல் புதுப்பொலிவுடன் விடிந்திருக்கிறது. எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்ததை பார்த்திருக்கிறோம். ஆனால் ஆளுநரையே வெளிநடப்பு செய்த பெருமையோடு இந்த பொங்கல் புத்தாண்டை வரவேற்போம். அண்ணா வைத்த தமிழ்நாடு என்ற பெயரை மக்கள் பிரதிநிதி அல்லாத ஒருவர் தவறாக அழைக்கக்கூடாது. ஆளுநர் உரை என்பது ஆளுநரின் சொந்த உரை அல்ல, தமிழக அரசால் எழுதி கொடுக்கப்பட்ட உரைதான். மத்தியில் இவர்களால் தேந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவர். மத்தியில் ஆட்சி மாறினாலோ அல்லது பாஜ ஆளும் மாநிலங்களில் இவ்வாறாக நடந்தால் ஏற்றுக்கொள்வார்களா? ஆளுநர் பதவியை வைத்துக்கொண்டு எவ்வாறு எல்லாம் அரசியல் செய்ய முடியுமோ, அவ்வாறெல்லாம் செய்திருக்கிறார்கள். தமிழ்நாடு என்ற வார்த்தையை உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் நிறுத்தப்பட்டிருகிறோம். இந்த பொங்கல் நிகழ்ச்சி அதை அவர்களுக்கு உணர்த்தும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பெண்களுக்கு கனிமொழி எம்பி வழங்கினார். நிகழ்ச்சியில் சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் இளைய அருணா, சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, மகளிர் அணி நிர்வாகிகள் விஜயா தாயன்பன், ஹெலன் டேவிட்சன், நாகேந்திரன், ராணி, சேலம் சுஜாதா, நாகம்மை கருப்பையா, பொதுக்குழு உறுப்பினர் கருணாநிதி, ஆர்.எம்.டி.ரவீந்திரன், பகுதி செயலாளர்கள் வ.பே.சுரேஷ், செந்தில்குமார் மற்றும் திமுக மகளிர் அணியினர்  கலந்து கொண்டனர்.

Related Stories: