திருவனந்தபுரத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி கேரளாவில் இருந்து கறிக்கோழிகள் கொண்டுவர தடை-சோதனைசாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்

நாகர்கோவில் :  பறவை காய்ச்சல் காரணமாக திருவனந்தபுரத்தில் கூட்டம் கூட்டமாக கோழிகள் இறந்து வரும் நிலையில் கேரளாவில் இருந்து குமரிமாவட்டத்திற்கு கறிகோழிகளை ஏற்றிவர தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வருகின்ற வாகனங்களை எல்லை பகுதியில் திருப்பி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் அருகே உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் சிறையின்கீழ் என்ற பகுதியில் ஆழூர் பஞ்சாயத்தில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்குள்ள 17ம் வார்டில் ஒரு தனியார் ேகாழிப்பண்ணையில் கூட்டம் கூட்டமாக இறந்து விழுந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மாதிரிகள் கேரள அரசின் ஆய்வகத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து போபாலில் உள்ள என்ஐஎச்எஸ்ஐ ஆய்வகத்தில் நடத்திய பரிசோதனையில் பறவை காய்ச்சல் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கோழிப்பண்ணை செயல்பட்ட இடத்தில் இருந்து 10 கி.மீ சுற்றளவில் உள்ள பகுதிகளில் கோழி, வாத்துகள், வீடுகளில் வளர்க்கப்படுகின்ற பறவைகள் ஆகியவற்றை விற்பனை செய்வது, இடமாற்றம் செய்வது அடுத்த மூன்று மாதங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.  இதனை போன்று இறைச்சி, உரம், தீவனம், முட்டை ேபான்றவற்றையும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கால்நடை பராமரிப்பு துறையின் அதிகாரிகள் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள பண்ணைகளில் கோழிகளை கொல்லும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக பண்ணையில் இருந்து 1 கி.மீ சுற்றளவில் உள்ள கோழிகள், வாத்து உள்ளிட்ட வளர்ப்பு பறவைகள் அனைத்தும் கொல்லப்படும். அவற்றின் முட்டைகள், தீவனம், கழிவுகள் ஆகியவையும் அழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவனந்தபுரம் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உஷார்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள், கோழிகள், வாத்துகள் அதிக எண்ணிக்கையில் எங்கேனும் உயிரிழப்பு ஏற்பட்டால் அது தொடர்பாக அறிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இறைச்சி, கோழிகள், முட்டை போன்றவற்றை குமரி மாவட்டத்திற்கு எடுத்துவர வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே கேரளாவில் இந்து ஓட்டல்களில் உள்ள கழிவுகள், இறைச்சி கழிவுகள் லாரிகள், டெம்போக்களில் கொண்டுவந்து கொட்டப்படுகிறது. அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்திய நிலையிலும் கழிவுகள் கொட்டப்படுகின்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 இந்தநிலையில் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்ட இடங்களில் உள்ள கழிவுகளை குமரி மாவட்டத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்துவர வாய்ப்புகள் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு குமரி - கேரள எல்லை பகுதிகளில் சோதனை சாவடிகளை உஷார்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பறவை காய்ச்சல் பொதுவாக பறவைகளிடம் இருந்து மற்ற பறவைகளுக்கு பரவும். அதே வேளையில் மனிதர்களுக்கு இவை சாதாரணமாக பரவுவது இல்லை.

இருப்பினும் பறவைகளில் இருந்து மனிதர்களுக்கும் இதன் உருமாற்றம் பெற்ற வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. அவை மனிதர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கோழி, வாத்து, காடை, வான்கோழி, அலங்கார பறவையினங்கள் போன்ற அனைத்து வகை பறவைகளையும் இந்த நோய் தாக்கலாம். இருப்பினும் கேரளாவில் மனிதர்களை பறவை காய்ச்சல் தாக்கியதாக விபரங்கள் ஏதும் இல்லை. இருப்பினும் பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பறவைகளை வளர்க்கின்றவர்கள், அதற்கு உணவு வைக்கின்றவர்கள், சுத்தம் செய்கின்றவர்கள், இறைச்சி கடைகளில் பணியாற்றுகின்றவர்கள், கால்நடை மருத்துவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகும்.

 கடுமையான உடல்வலி, காய்ச்சல், இருமல், சுவாசக்கோளாறுகள் போன்றவை இந்த நோயின் அறிகுறி ஆகும். நோய் பரவும் வாய்ப்புள்ள இடங்களில் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் இருப்பின் உடனே அவர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம் ஆகும். குமரி கேரளா எல்லை பகுதிகளில் கால்நடை துறை சார்பில் பன்றி காய்ச்சல் தொடர்பாக பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கேரளாவில் ேகாட்டயம் பகுதியில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில் கடந்த அக்டோபர் 27ம் தேதி முதல் குமரி கேரள எல்லை பகுதியில் படந்தாலுமூடு சோதனை சாவடியில் சிறப்பு குழு நியமிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இன்று 75வது நாளாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது திருவனந்தபுரம் மாவட்டத்திலும் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் கண்காணிப்பு பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து கறிக்கோழிகள், ேகாழி குஞ்சுகள், தீவனம், முட்டை போன்ற பொருட்கள் எடுத்துவர தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எடுத்துவருவதை தடுக்க கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு இறைச்சி கோழி லோடுடன் வாகனங்கள் வந்தால் அவற்றை அப்படியே திருப்பி அனுப்பவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. களியக்காவிளையில் படந்தாலுமூடு சோதனை சாவடியில் 3 குழுக்களும், காக்கவிளை சோதனை சாவடியில் ஒரு குழுவும் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு தீவனம், கோழிகள் கொண்டு செல்லும் வாகனங்கள் திரும்பி வரும்போது அவற்றின் சக்கரங்களில் கிருமிநாசினி தெளித்த பிறகே அனுமதிக்கப்படுகிறது. இதுவரை குமரி மாவட்டத்தில் எங்கும் பறவை காய்ச்சல் கண்டறியப்பட வில்லை. பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: