சென்னை: மெரினா லூப் சாலையிலுள்ள விளையாட்டு மைதானம் திறந்தவெளி கழிப்பிடமாக மாறியுள்ளதால் சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை நம்பிக்கை நகர் அருகே மெரினா லூப் சாலையில், ஒரு ஏக்கர் பரப்பளவில், மாநகராட்சி சார்பில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக பராமரிக்காததால் தற்போது திறந்தவெளி கழிப்பறையாக மாறியுள்ளது. இதனால், மைதானம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் இளைஞர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியாமலும், பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய முடியாமலும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதிக்கு பொது கழிவறை இல்லாததால், வேறு வழியின்றி மைதானத்தை கழிப்பறையாக பலர் பயன்படுத்துகின்றனர். ஏற்கனவே இந்த சாலையில் இரண்டு கழிப்பறைகள் இருந்தது. அது பல மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் பொதுகழிப்பறை கட்டி கொடுத்தால், மைதானத்தை யாரும் கழிப்பறையாக பயன்படுத்த மாட்டார்கள். மைதானத்தில் மாநகராட்சி நிர்வாகம் சீரமைத்து, மின் விளக்குகள் அமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும்,’’ என்றனர்.
மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு கூறுகையில், ‘‘லூப் சாலையில் உள்ள 2 பொது கழிப்பறைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இது தவிர, எனது தொகுதியில் கூடுதலாக 40 கழிப்பறைகள் அமைக்கப்படுகிறது. இந்த கழிவறைகள் பயன்பாட்டிற்கு வந்தால் இப்பிரச்னை இருக்காது. விரைவில் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.