சட்டப்பேரவை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அலுவலகத்தில் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சட்டப் பேரவை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அலுவலகத்தில், சமீபத்தில் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா உருவபடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா சமீபத்தில் உடல் நலக் குறைவால் காலமானார். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபை காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருமகன் ஈவெரா திருஉருவப் படம் வைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அப்போது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அவரை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, அரசு கொறடா கோவி செழியன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.மேலும், திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் எம்எல்ஏக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

துளிகள்

* புதிதாக அமைச்சராகி உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு முன்வரிசையில், 10வது இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர், அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அடுத்த இடத்தில் அமர்ந்திருந்தார். ஏற்கனவே, முன் வரிசையில் இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன், கீதாஜீவன் ஆகியோர் 2வது வரிசையிலும், 2வது வரிசையில் இருந்த மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் 3வது வரிசையிலும் அமர்ந்திருந்தனர்.

* தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டதால், அமைச்சர்களுக்கும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் முன் இருந்த மேஜை அகற்றப்பட்டு கவர்னர் வருவதற்கு சிறப்பு வழி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

* கவர்னர் ஆர்.என்.ரவி காலை 10.01 மணிக்கு ஆங்கில உரையை படிக்க தொடங்கி 10.48 மணிக்கு முடித்தார். பின்னர் சபாநாயகர் அப்பாவு 10.49க்கு தமிழில் வாசிக்க தொடங்கி 11.30 மணிக்கு வாசித்து முடித்தார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தேசியகீதம் இசைக்கப்பட்டு 11.35 மணிக்கு பேரவை கூட்டம் முடிவடைந்தது.

Related Stories: