திருவனந்தபுரத்தில் பறவைக் காய்ச்சல்: 3 ஆயிரம் பறவைகளை கொல்லும் பணி துவங்கியது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் அழூர் அருகே உள்ள பெருங்குழி பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான கோழி, வாத்துப் பண்ணைகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான கோழி மற்றும் வாத்துக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக இந்தப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான கோழிகளும், வாத்துகளும் திடீரென சாகத் தொடங்கின. இவற்றின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக போபால் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப் பண்ணையில் உள்ள வாத்து, கோழிகளையும், மேலும் 1 கிமீ சுற்றளவில் உள்ள அனைத்து பறவைகளையும் கொல்ல தீர்மானிக்கப்பட்டது. முதல் கட்டமாக 3,000 பறவைகளைக் கொல்லும் பணி இன்று காலை தொடங்கியது.

இதற்கிடையே நோய் பாதிக்கப்பட்ட பண்ணையின் ஒரு கிமீ சுற்றளவில் 9 கிமீ பகுதியில் பறவை இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிப்பகுதியில் இருந்து இங்கு முட்டை, இறைச்சி கொண்டு வரவும், இங்கிருந்து வெளியே கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கோட்டயம் மாவட்டம் செம்பு பகுதியிலும் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டடுள்ளது. இதையடுத்து அங்குள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் 300க்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டன. கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து மனிதர்களுக்கும் இந்நோய் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.

Related Stories: