சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் பராமரிப்பின்றி கிடக்கும் பூங்காவை ரூ.47 லட்சத்தில் சீரமைக்க திட்டம்-10 ஆண்டுக்கு பிறகு விமோசனம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்பட்ட பகுதியில், பராமரிப்பின்றி கிடப்பில் கிடக்கும் பூங்காவை ரூ.47 லட்சத்தில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பூங்காவுக்கு 10 ஆண்டுக்கு பிறகு விமோசனம் தற்போது கிடைத்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பேரூராட்சிக்கு உட்பட்ட  ஜோதிநகர் சி.காலனி அழகப்பர்வீதி, ஜெயபிரகாஷ் வீதி சந்திப்பில் காலியிடத்தில், சுமார் 20 ஆண்டுக்கு முன்பு ‘டாக்டர் கலைஞர் பூங்கா’ என்ற பெயரில் நவீன பூங்கா  திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது.

குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் பூங்காவில், சிறுவர்கள் விளையாட சறுக்கு, ஊஞ்சல் மற்றும் இளைஞர்கள் விளையாட இரும்பு கம்பி பார் உள்ளிட்டவையும், முதியவர்கள் வாங்கிங் செல்ல நடைபாதை மற்றும் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பூங்காவையும், விளையாட்டு கருவிகளையும் அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இப்பூங்காவை, கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக முறையான பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் நாள் போக்கில் சிதிலமடைந்தது. மேலும் சில பொருட்கள் மாயமான அவலம் ஏற்பட்டது.

இருப்பினும், இந்த பூங்காவை பராமரிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டதால், தற்போது அந்த இடம் பல ஆண்டுகளாக மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும், பூங்காவை சுற்றிலும் காடு போன்று மரங்கள் வளர்ந்து, புதர்மண்டி கிடக்கிறது. இதுதவிர, திறந்த வெளியில் இருப்பதால், இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படி 10 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்ட சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பூங்கா, பயன்பாடின்றி கிடப்பதால் பூங்காவின் ஒரு பகுதியில் ஆக்கிரமிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், 10 ஆண்டுக்கு மேலாக, பூங்காவை முறையாக பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டது. அதிகாரிகளின் அலட்சிய போக்கு பொதுமக்கள் இடையே கடும்வேதனையை ஏற்படுத்தியது. இதையடுத்து சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பூங்காவை பராமரிக்க சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி ஏற்பட்டதையடுத்து, பூங்காவை முழுமையாக புனரமைப்பு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ.47 லட்சம் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, எந்தவித பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்ட டாக்டர் கலைஞர் பூங்கா முழுமையாக சீரமைத்து,  பராமரிப்பு பணியை துவங்கி, விரைந்து நிறைவு செய்யவும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பூங்காவில் முழுமையாக பராமரிப்பு பணி நிறைவடைந்ததும், அங்கு சிறுவர், சிறுமியர் விளையாடுவதற்கான புதிய  விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை, இளைஞர்கள் விளையாட இரும்பு பார் உள்ளிட்டவை ஏற்படுத்தி மீண்டும் நவீன பூங்காவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: