புதுக்கடை அருகே ஊருக்குள் புகுந்த ஆண் மிளா 3 மணி நேரம் போராடி பிடித்தனர்

புதுக்கடை: புதுக்கடை அருகே  ஊருக்குள் புகுந்த ஆண் மிளாவை   வனத்துறைமற்றும் தீயணைப்பு துறையினர் 3 மணி நேரம் போராடி பிடித்தனர். குமரி மாவட்டத்தில் உள்ள காடுகளில் இருந்து தப்பி வந்த இரண்டு மிளாக் குட்டிகள் நேற்று  முன்தினம் குளச்சல் குடியிருப்பு பகுதியில் நின்று கொண்டிருந்தன. இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலை தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மிளாக் குட்டிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மிளா அங்கிருந்து தப்பியது.

இந்நிலையில் நேற்று காலை புதுக்கடை அருகே முக்காடு பகுதியில் பெரிய ஆண் மிளா ஒன்று சாலையோரமாக நடந்து சென்றுள்ளது.

இதை பார்த்த  இளைஞர்கள் இந்த மிளாவை பின் தொடர்ந்து சென்றனர். ஆனால் மிளா இவர்களைக் கண்டு பயப்படாமல் நடந்து சென்று கொண்டே இருந்தது. இதுகுறித்து  போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து முக்காடு பகுதிக்கு குழித்துறை தீயணைப்புத்துறையினர், களியல் வனக்காவலர்கள் வந்தனர்.  இவர்களுடன் அப்பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் சேர்ந்து மிளாவை பிடிப்பதற்காக  பின்னால் சென்றனர். ஆனால் மிளா மின்னல் வேகத்தில் பாய்ந்து  கால்வாயை  தாவி சென்றது. இதனால் தீயணைப்புத் துறையினரும் ,வனக்காவலர்களும்  மிளாவை எப்படி பிடிப்பது என்று தெரியாமல் பின்னால் ஓடிக் கொண்டிருந்தனர்.

பெருநெல்குடிவிளை  நாராயண சுவாமி கோயில் தெப்பக்குளம் அருகே வந்தபோது, அனைவரும் ஒருங்கிணைந்து மிளாவை சுற்றி வளைத்தனர். அப்போது மிளா குளத்திற்குள் பாய்ந்தது. அதன் பின்னர் குளத்தில் இருந்து மிளாவை மீட்பதற்காக குழித்துறை தீயணைப்புத் துறை அதிகாரி சந்திரன் தலைமையில் தீயணைப்புத் துறையினரும், களியல் வனச்சரக அலுவலர் முகைதீன் அப்துல் காதர் தலைமையில் வனக் காவலர்களும் கயிறு மூலம் மீட்பதற்கு போராடினர். ஆனால் மிளா  சிக்கவில்லை. மூன்று மணி நேரம் போராட்டத்துக்கு பின்னர் ஒரு  வழியாக படிக்கட்டு வழியாக ஏற வைத்து  மிளாவை பிடித்தனர்.  அப்போது அது ஆவேசம் அடைந்து   கால்களால்  தாக்கியது. பிடிபட்ட  மிளாவை வனச்சரக வண்டியில் ஏற்றி கொண்டு சென்றனர்.

Related Stories: