நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத நெல்லை சிஇஓ, டிஇஓக்கு ஐகோர்ட் கிளை பிடிவாரன்ட்

மதுரை: நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத நெல்லை சிஇஓ, டிஇஓக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தூத்துக்குடியை சேர்ந்த பிராங்க்லின் ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில்,பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் மேல்நிலைப்பள்ளியில் கிரேட் 2 ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் பிடி அசிஸ்டன்ட் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றிருந்தும் பதவி உயர்வு அளிக்கவில்லை. இதுதொடர்பாக 2020ல் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்ததில் 8 வாரத்திற்குள் எனது மனுவை பரிசீலிக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், தற்போது வரை எனது பதவி உயர்வுக்கான மனுவை அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை.

எனவே, நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இவ்வழக்கின் முந்தைய விசாரணையில், திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிபதி தண்டபாணி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் ஆஜராகவில்லை. இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு ஜாமீனுடன் கூடிய பிடிவாரன்டை பிறப்பித்து, வரும் 20ம் தேதி அவர்களை ஆஜர்படுத்த திருநெல்வேலி எஸ்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: