அறநிலையத்துறை இணை ஆணையர் தகவல் தலசயன பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் மே 4ல் நடக்கிறது

சென்னை: மாமல்லபுரம் கடற்கரை பகுதியையொட்டி 7 கோயில்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. மேலும், கடல் முன்னோக்கி வந்ததால் 6 கோயில்கள் கடலில் மூழ்கியது. இதில், மீதம் இருந்த ஒரே ஒரு கடற்கரை கோயில் இது. இக்கோயிலை, பாதுகாக்கவும், அதில் இருந்த தலசயன பெருமாள் கடல் அடியில் சென்று விடுமோ என்ற ஐயத்தில் 7ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள், மாமல்லபுரத்தின் மைய பகுதியான பஸ் நிலையம் அருகே கடற்கரை கோயிலில் தலசயன பெருமாள் கோயில் கட்டி சிலை அமைத்தனர். இக்கோயில், தற்போது இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

 

மேலும், இக்கோயிலில் 1998ம் ஆண்டு பாலாலயம் செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பிறகு, கடந்த 24 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்கவில்லை. இந்த நிலையில், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இந்த கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய, கடந்த 2021ம் ரூ. 63 லட்சம் ஒதுக்கினார். இதையடுத்து, கடந்தாண்டு 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் உள்ளூர் அர்ச்சகர்கள், திருநீர்மலை, காஞ்சிபுரம், நாமக்கல், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட அர்ச்சகர்களை அழைத்து வந்து, 19, 20, 21 ஆகிய மூன்று தினங்கள் யாக குண்டம் வளர்த்து கடைசி நாளான 21ம் தேதி பாலாலயம் செய்து, கருவறையை மூடினர்.

தொடர்ந்து, மூலவரை தற்காலிகமாக இடமாற்றம் செய்து கருவறைக்கு அருகே கண்ணாடி அறையில் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தலசயன பெருமாள் கோயிலில் நடந்து வரும் திருப்பணிகளை காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் வான்மதி ஆய்வு செய்து, விரைவில் அனைத்து பணிகளும் முழுமையாக முடித்து வரும் மே 4ம் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து, பூதத்தாழ்வார் மண்டபத்தை ஆய்வு நடைபாதை அமைத்து நந்தவனம் போல் பராமரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Stories: