பட்டாளம்மன் கோயில் விழாவில் சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே பட்டாளம்மன் கோயில் விழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.கிருஷ்ணகிரி அடுத்த கனகமுட்லு கிராமத்தில், பட்டாளம்மன் கோயில் விழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 10 மணிக்கு கனகமுட்லு மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 7 கிராமங்களிலிருந்து, 500க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்துக் கொண்டு கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும், நேர்த்திக் கடன் செலுத்தும் விதமாக, கோயில் பூசாரியிடம் ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு சாட்டையடி வாங்கினர்.

இப்பூஜையின் போது, வானத்தில் கருடன் தோன்றினால் தான், இவர்கள் அங்கிருந்து புறப்பட்டு மாரியம்மன் கோயிலுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டும், கருடன் தோன்றும் வரை பம்பை அடித்து பட்டாளம்மன் பாடல் பாடி வேண்டிக் கொண்டனர். பகல் 1.30 மணிக்கு வானத்தில் கருடன் தோன்றியதால், மீண்டும் மா விளக்கை ஊர்வலமாக எடுத்துக்கொண்டு மாரியம்மன் கோயிலுக்கு சென்று பக்தர்கள் வழிபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: