மெரினாவில் ஜல்லிக்கட்டு: அனுமதி கோரி கமல் மனு

சென்னை: சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்பதே என் விருப்பம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்ய கட்சி அலுவலகத்தில் நேற்று, நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கமல்ஹாசன் பேசியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு மத அரசியலை செய்து கொண்டிருக்கிறது. மதத்தை அரசியலுக்கான தகுதியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்து மதத்தை வைத்து அரசியல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டில் மக்களை ஒன்றிணைக்கும் வகையில் மக்களை ஒற்றுமைப்படுத்தும் வகையில் ராகுலின் நடைப்பயணம் உள்ளது. சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி போராட்டம் நடைபெற்று அதில் வெற்றி பெற்றதை நினைவுகூரும் விதமாக மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும். அதற்கு நாங்கள் அனுமதி கோரியுள்ளோம். விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

* கவர்னருக்கு பதிலடி

கிண்டி ராஜ்பவனில் நடந்த விழா ஒன்றில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி ‘‘ தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்’’ என்று பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டரில் ‘தமிழ்நாடு வாழ்க’ என்று ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் பதிவிட்டு கவர்னருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு நேற்று வைரலாக பரவியது. டிவிட்டரில் தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.

Related Stories: