புதிய நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்காக எம்பிக்களுக்கு புதிய அடையாள அட்டை: மக்களவை அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றம் வரும் மார்ச் வாக்கில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதால், எம்பிகளுக்காகன புதிய அடையாள அட்டை தயாரிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதற்பகுதி வரும் ஜனவரி  31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 10ம் தேதி வரையும் நடக்கும் என்றும்,  கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி மார்ச் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி  முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்  நாளில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார். பிப்ரவரி 1ம்  தேதி  மக்களவையில் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்நிலையில்  பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி நடைபெறும் போது (மார்ச்) புதிய  நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டு, எம்பிக்களின் பயன்பாட்டுக்கு வரும்  என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து  வருவதாகவும், அந்தப் பணிகள் பிப்ரவரியில் நிறைவடையும் என்றும் அதிகாரிகள்  தெரிவித்தனர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், ‘புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் செல்லும் எம்பிக்களுக்கான புதிய அடையாள அட்டையை மக்களவை செயலகம் தயாரிக்கத் தொடங்கியுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் குறித்த பயிற்சியானது, நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் எம்பிக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எம்பிக்களுக்கு ஸ்மார்ட் கார்டு அடிப்படையிலான புதிய அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டைகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்படுகிறது. அதற்காக எம்பிக்களிடம் தனிப்பட்ட மற்றும் பயோமெட்ரிக் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன’ என்று அவர்கள் கூறினர்.

Related Stories: