அண்ணாமலை தலைமையிலான பாஜவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: காயத்ரி ரகுராமின் பதிவை சுட்டிக்காட்டி கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை:  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

  தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதற்கொண்டு பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் நாள்தோறும் அவதூறுகளையும், அபத்தங்களையும் கருத்துகளாக வெளியிட்டு வருகிறார். இவரது ஆதாரமற்ற கருத்துகளுக்கு விளக்கம் கேட்டால் பத்திரிகையாளர்கள் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்துவதோடு, மிரட்டுகிற தொனியில் பேசுகிறார்.

 ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படுகிற ஊடகத் துறையை மிக மிக கேவலமாக நடத்துவது குறித்து பத்திரிகையாளர்கள் சங்கமே கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. ஆனாலும், அண்ணாமலை பாடம் கற்றதாகத் தெரியவில்லை. சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

 ஆனால், சமீபத்தில் பாஜவில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம், ‘‘அண்ணாமலை தலைமையில் இருக்கிற பாஜவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. பல்வேறு தொல்லைகளுக்கு பெண்கள் ஆளாகி வருகிறார்கள்’’ என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாகக் கூறியுள்ளார். ஆனால், பெண் காவலர்களுக்கு தொல்லை கொடுத்ததாக புகார் வந்த உடனே இரு திமுகவினர் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுபோன்ற தவறுகளை திமுக உள்ளிட்ட எவர் செய்தாலும் அவர்கள் மீது காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது.

 தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுகளைப் பார்க்கிற போது, அரசமைப்புச் சட்டம் உருவாக்கியது ஆளுநரா அல்லது தமிழக பாஜவின் கொள்கை பரப்பு செயலாளரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. தமிழக அமைச்சரவை எடுக்கிற முடிவுகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: