கொள்ளை போனதாக நாடகமாடி ரூ.1.54 லட்சம் அபேஸ் செய்த பெட்ரோல் பங்க் மேலாளர்: கூட்டாளிகளுடன் கைது

சென்னை: ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலை, வசந்தம் நகர் எதிரே தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இங்கு, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா (24), மேலாளராக கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் காலை பெட்ரோல் பங்க்கில் வசூலான ரூ.1.54 லட்சத்தை வங்கியில் செலுத்த பைக்கில் எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில், ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு சாலையில், தான் பைக்கில் சென்றபோது, 2 மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து தன்னை வழிமறித்து, சரமாரியாக தாக்கி, தன்னிடம் இருந்த ரூ.1.54 லட்சத்தை பறித்து சென்றதாக போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், ஆவடி உதவி ஆணையர் புருஷோத்தமன், இன்ஸ்பெக்டர்கள் அருணாசலம், டெல்லிபாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், வழிப்பறி நடந்ததாக எந்த பதிவும் இல்லை. இதனால், பெட்ரோல் பங்க் மேலாளர் கார்த்திக் ராஜா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்தனர். அதில், வழிப்பறி நடந்ததாக நாடகமாடியது தெரியவந்தது.

தீவிர விசாரணையில், பெட்ரோல் பங்க் பணத்தை அபேஸ் செய்ய திட்டமிட்ட கார்த்திக் ராஜா, தனது நண்பர்களான  தஞ்சை மாவட்டம், கன்னியம்மன் நகரை சேர்ந்த தங்கமுத்து (26), திருவாரூர் மாவட்டம், ஆண்டிபாளையம் பிரதான சாலையை சேர்ந்த ஆனந்த் (22) ஆகியோருடன் சேர்ந்து பணத்தை அபேஸ் செய்துவிட்டு, வழிப்பறி நாடகமாடியது தெரிய வந்தது. இவர்களை, நேற்று அதிகாலை  செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து, கார்த்திக் ராஜா உள்பட 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். கொள்ளையடித்த பணத்தில் ரூ.50 ஆயிரத்தை ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்திருப்பதாக 3 பேரும் தெரிவித்ததால், மீதமுள்ள ரூ.75 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: