ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.35 லட்சத்தில் மின்மாற்றி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தண்டையார்பேட்டை: ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.35 லட்சம் செலவில் புதிய மின்மாற்றியை எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி தொடங்கி வைத்தார். ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பனைமரத்தொட்டி மேற்கு மாதா கோயில் தெரு, கிழக்கு மாதா கோயில் தெரு ஆகிய பகுதிகளில் அடிக்கடி மின்தடை, உயர் மின் அழுத்தம் போன்ற பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதனை சரிசெய்ய வேண்டும் என பகுதி மக்கள், எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தியிடம்  கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில், மின்சார துறை அமைச்சரின் கவனத்திற்கு இதை கொண்டு சென்று, மேற்கண்ட பகுதிக்கு ரூ.35 லட்சம் செலவில் புதிதாக மின்மாற்றி மற்றும் மின் அலகு சுற்று அமைக்கும் பணி நடைபெற்றது. அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, புதிய மின்மாற்றி சேவையை தொடங்கி வைத்து பேசியதாவது: இந்த புதிய மின்மாற்றி மூலம் இந்த பகுதியில் இனிமேல் மின்தடை ஏற்படாது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அதற்கு, உதாரணமாக ராயபுரம் தொகுதியில் சொல்ல வேண்டும் என்றால் மின்சார பிரச்னை உள்ள பகுதியில் உடனடியாக டிரான்ஸ்பார்மர் புதிய வயர்கள் அமைக்கப்பட்டு, மக்கள் பிரச்னைகளை உடனடியாக தீர்க்கப்பட்டு வருகிறது. பழைமை வாய்ந்த அரசு ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம், முழு உடல் பரிசோதனை திட்டம், புதிய சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளது. பூங்காக்கள், பள்ளி கட்டிடங்கள், ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், திமுக பகுதி செயலாளர்கள் வ.பே.சுரேஷ், செந்தில்குமார், மின்வாரிய அதிகாரிகள் சொக்கலிங்கம், அப்பன் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: