பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவது குறித்து உணவு வழங்கல் துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம்: ராயபுரம் எம்எல்ஏ பங்கேற்பு

தண்டையார்பேட்டை: ராயபுரத்தில், பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவது குறித்து, எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி தலைமையில், உணவு வழங்கல் துறை அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ராயபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 51 ரேஷன் கடைகள் உள்ளது. இதில், 55 ஆயிரம் குடும்ப அட்டைத்தாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். தற்போது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசாக ரூ.1000, அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிடவைகளை வழங்க தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இவை மக்களுக்கு தடையின்றி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து, ராயபுரம் அண்ணா நீரேற்று நிலையம் அருகே உள்ள ராயபுரம் எம்எல்ஏ அலுவலகத்தில் உணவு வழங்கல் துறை அதிகாரிகளுடன், ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி தலைமையில் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், உணவு வழங்கல் துறை உதவி ஆணையர் ராணி நாம்கோ, மேலாண்மை இயக்குனர் சக்தி முத்துக்குமார், வண்ணாரப்பேட்டை கூட்டுறவு பண்டகசாலை மணிமாறன், தண்டையார்பேட்டை கூட்டுறவு பண்டகசாலை தனசேகர், தொமுச கூட்டுறவு ரேஷன் கடை சங்க மாநில இணை செயலாளர் பிரபு, ராயபுரம் பகுதி செயலாளர்கள் வ.பே.சுரேஷ், செந்தில்குமார், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி கூறுகையில்,‘‘முதல்வரின் சீரிய திட்டங்களை அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள், இதற்காக நான் பாராட்டுகிறேன். கூட்டுறவு துறை கடந்த காலங்களில் சரியாக செயல்படாத ஒரு நிலை இருந்தது. ஆனால், பல மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போது சிறப்பாக செயல்படுகிறது. பொங்கல் பரிசு தொகையை முதல்வரின் எண்ணங்களுக்கு ஏற்ப நீங்கள் எந்தவித பிரச்னையும் இன்றி மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

மேலும், முறையாக ஒரு நாளைக்கு கொடுக்க வேண்டிய டோக்கன் கொடுத்து, அதன் அடிப்படையில் பொங்கல் பரிசு பொருட்களை வழங்கிட வேண்டும். உங்களுக்கு உள்ள பிரச்னைகளை என்னிடம் கூறினால், அது குறித்து நான் அதிகாரிகளிடம் கூறி சரி செய்து தருகிறேன். வண்ணாரப்பேட்டை மின்ட் மேம்பாலம் கீழ் உள்ள கடைகள் மற்றும் கொடி மரத் தெருவில் உள்ள கடை, பனைமரத் தொட்டியில் உள்ள கடை போன்றவற்றில் கட்டிடங்கள் ஒழுகுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை எம்எல்ஏ நிதியில் இருந்து பணமும் ஒதுக்கி கட்டிடங்களை சரி செய்து தரப்படும்” என்றார்.

Related Stories: