நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 46வது சென்னை புத்தக காட்சி நாளை தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்; 6 பேருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருது

சென்னை: 46வது சென்னை புத்தக காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை முதல் ஜன.22ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் வைரவன் மற்றும் செயலாளர் முருகன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 46வது சென்னை புத்தக திருவிழா ஜன 6ம் தேதி தொடங்குகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தக காட்சியை தொடங்கி வைத்து விழா உரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொள்கிறார்.

ஜன.6ம் தேதி தொடங்கும் புத்தக காட்சி ஜன.22ம் தேதி வரை தினமும் காலை 11 மணியிலிருந்து இரவு 8:30 மணி வரை நடைபெறும். கடந்த ஆண்டு 800 அரங்குகள் இருந்தது இந்த ஆண்டு 200 அரங்குகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அரங்குகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் நடைபாதைக்கான வழி குறைவாக இருக்கும். தமிழக அரசு சார்பில் நடக்கும் சர்வதேச புத்தக காட்சி ஜன.16, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. அதற்காக 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

இலங்கை, சிங்கப்பூரிலிருந்து தமிழ் பதிப்பகங்கள் புத்தக் காட்சியில் இடம்பெறவுள்ளது. திருநங்ககைளால் நடத்தப்படும் பதிப்பகத்துக்கு பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பங்கேற்க இயலாத புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள், தமிழர்கள் பெருமளவில் வருவார்கள்  என எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை நேரத்தில் கருத்தரங்கம், பட்டிமன்றம் நடத்தப்படும். கடந்த ஆண்டு வரை பபாசி சார்பில் 7 விருதுகள் வழங்கப்பட்டது இந்த ஆண்டு 2 விருதுகள் கூடுதலாக சேர்த்து 9 விருதுகள் வழங்கப்படுகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருது 6 பேருக்கு வழங்கப்படுகிறது.

நாவல் பிரிவுக்கு  தேவி பாரதி, சிறுகதைக்கு சந்திரா தங்கராஜ், கவிதை பிரிவுக்கு தேவதேவன், பொழிபெயர்ப்புக்கு மோகன், நாடகத்திற்கு பிரளயன், உரைநடைக்கு சுப்பிரமணியன் ஆகிய 6 பேருக்கு பொற்கிழி விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 100வது நபருக்கு கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்படவுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்க உள்ளார். சர்வதேச புத்தக காட்சி நடக்கவுள்ளதால் இந்த ஆண்டு தொல்லியல்துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்படவில்லை. 20 முதல் 40 புத்தகங்கள் வைத்திருப்பவர்களுக்காக மினி ராக் சிஸ்டம் அறிமுகம் செய்திருக்கிறோம்.

புத்தகங்கள் வாங்குவோர் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் போது நெட்வொர்க் பிரச்னை ஏற்படாமல் இருக்க ஜியோ, ஏர்டெல்  நெட்வர்க்குகளின் டவர் அமைக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் வைஃபையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூலம் வரும் மாணவர்களுக்கு அனுமதி இலவசம் மற்றவர்களுக்கு ரூ.10 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும். குழந்தைகளுக்காக பிரத்யேக அரங்கை வடிவமைக்கப்படுகிறது. அவர்களுக்கான புத்தகங்களை அங்கேயே வாங்கிக் கொள்ளலாம்.

கடந்த ஆண்டு 30 லட்சம் பேர் புத்தக காட்சிக்கு வருகை தந்தனர். இந்த ஆண்டு 50 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிவாளர் சங்க உறுப்பினர்களுக்கு புத்தக பூங்கா  அமைக்க இடம் தருவதாக கடந்த ஆண்டே அரசு அறிவித்தது. இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிவாளர் சங்கத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து ஆலோசித்து செயல்பட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

* ஜன.6ம் தேதி தொடங்கும் புத்தக காட்சி ஜன.22ம் தேதி வரை தினமும் காலை 11 மணியிலிருந்து இரவு 8:30 மணி வரை நடைபெறும்.

* பள்ளிகள் மூலம் வரும் மாணவர்களுக்கு அனுமதி இலவசம் மற்றவர்களுக்கு ரூ.10 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும்.

Related Stories: