அகில இந்திய அளவில் உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் 2வது இடம்: வருமான வரித்துறை ஆணையர் பெருமிதம்

நெல்லை: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் 2வது இடம் வகிப்பதாக நெல்லையில் நடந்த வருமான வரித்துறை ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். நெல்லை வருமான வரித்துறை சார்பில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வரி செலுத்துவோர், ஆடிட்டர்கள் கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து தமிழகம், புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் பேசுகையில், ‘உலக அரங்கில் வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா தற்போது 5வது இடத்தில் உள்ளது. 2029 அல்லது 2030ல் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறும். இதன் மூலம் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி 3வது இடத்தை இந்தியா பெறும்.

இந்தியாவை பொறுத்தவரை நாடு முழுவதும் 7 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்து வருகின்றனர். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) மகாராஷ்டிரத்திற்கு அடுத்து தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.24 லட்சம் கோடி என்பது பாராட்டத்தக்கது. தமிழகத்தில் தொழிலதிபர்கள், வரி செலுத்துவோர் அதிகம் உள்ளனர். வரி செலுத்துவோரில் 99 சதவீதத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். 1 சதவீதம் மட்டுமே எங்களால் தீவிர பரிசீலனை செய்யப்படுகிறது. அதற்குரிய ஆதாரங்கள், ஆவணங்களை திரட்டிய பின்னரே நடவடிக்கை மேற்கொள்கிறோம். வருமான வரி திரும்பப் பெறுதலை உடனுக்குடன் வழங்கி வருகிறோம். ஏற்கெனவே நிலுவையில் உள்ள வருமான வரி திரும்பப் பெறப்படவில்லை எனில் வருமான வரி அலுவலத்தில் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள ‘ஜாவ்’ (Juridictional Assessing Officer) என்ற அலுவலரை அணுகி தீர்வு பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: