பொங்கல் பரிசு தொகுப்பிற்கான ரூ.1000 ரொக்க பணம் நேரடியாகவே வழங்கப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படும் ரூ.1000 ரொக்க பணம் நேரடியாகவே ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களிடம் வழங்கப்படும், வங்கிகள் மூலம் வழங்கும் உத்தேசம் இல்லை என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 9ம் தேதியில் இருந்து விநியோகம் செய்யப்பட உள்ள நிலையில், பரிசு தொகுப்பில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்தும், ரேஷன் கடைகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடும் குறித்தும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான மூன்று நியாயவிலை கடைகளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச்செயலர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.  

இதன் பின்னர், நிருபர்களிடம் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அதனை நிறைவேற்றும் பொறுப்பு உணவுத்துறைக்கும், கூட்டுறவுத்துறைக்கும் உள்ளது. அந்தவகையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நியாய விலைக்கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டோம். பொங்கல் பண்டிகைக்கான தொகுப்புகளை முறையாக வழங்க வேண்டும், எந்தவிதமான சிக்கல்களும் இருக்கக்கூடாது என்பதற்கான டோக்கன்கள் கடந்த 3ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. வரும் 9ம் தேதி சென்னையில் முதல்வர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

பொங்கலுக்கான ரொக்க பணம் ரூ.1000 நேரடியாக வழங்கப்படும். வங்கிகள் மூலமாக பணத்தை வழங்கும் உத்தேசம் இல்லை. பொங்கல் பரிசு தொகுப்பு குறைபாடுகள் இல்லாமல் விநியோகிக்கப்படும். அப்படி குறைபாடுகள் ஆதாரத்தோடு சுட்டிக்காட்டப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல்கள் நடந்து வருகிறது. தமிழகத்தில் ராகி பைலட் முறையில் தருமபுரி, நீலகிரி முன்னோடியாக செயல்படுத்தலாம் என அறிவித்திருந்தோம். கொள்முதல் செய்யப்பட்ட பிறகு அரிசிக்கு பதிலாக இரண்டு மாவட்டங்களிலும் 2 கிலோ ராகி வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: