சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தீ விபத்து: கணினி உள்ளிட்ட மின்சாதனங்கள் எரிந்து நாசம்

சென்னை: சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது. உரிய நேரத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டதால் லாக்கரில் இருந்து பல லட்சம் பணம் மற்றும் நகைகள் தப்பியது. மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை அலுவலகம் உள்ளது. கட்டிடத்தின் தரை தளத்தில் வங்கியும், முதல் தளத்தில் 2 குடும்பங்களும் உள்ளன. இந்நிலையில் நேற்று காலை 5.30 மணிக்கு கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள வங்கியில் இருந்து கரும்புகை வெளியேறியது. அதேநேரம் வங்கியில் பொருத்தப்பட்டுள்ள அபாய மணியும் ஒலித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அருகில் வசிப்போர் வெளியே வந்து பார்த்தபோது, வங்கியின் உள்புறம் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

உடனே சம்பவம் குறித்து பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். மேலும், கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள 2 குடும்பத்தினரும் உடனே வெளியேற்றினர். தகவலறிந்து மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அசோக்நகர் பகுதியில் இருந்து 4 வாகனங்களில் தென் சென்னை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராபின் காஸ்ட்ரோ தலைமையில் 25 வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதற்கிடையே மின்வாரியத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் கடுமையான போராட்டத்துக்கு பிறகு வங்கியில் பரவிய தீயை வீரர்கள் கட்டுப்படுத்தினர். மேலும், அருகில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் வங்கியில் உள்ள கம்ப்யூட்டர்கள் மற்றும் ஏசி இயந்திரங்கள், மின்சாதனங்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. வீரர்கள் தீயை உடனே கட்டுப்படுத்தியதால் லாக்கரில் இருந்த பல லட்சம் பணம் மற்றும் நகைகள் தப்பியது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில், மயிலாப்பூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் தீ விபத்து, கம்ப்யூட்டரில் ஏற்பட்ட மின் கசிவால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இருந்தாலும் போலீசார் தீ விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் சிறிது நேரம் மயிலாப்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: