9 மாநில பேரவை தேர்தல், 2024 லோக்சபா தேர்தலுக்காக பிப்ரவரியில் காங். தேசிய செயற்குழு கூட்டம்: சட்டீஸ்கரில் நடக்கிறது

புதுடெல்லி: சட்டீஸ்கரில் வரும் பிப்ரவரியில் நடக்கும் காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்தாண்டு நடக்கும் 9 மாநில பேரவை தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என்று மூத்த தலைவர் கூறினார். காங்கிரஸ் கட்சியில் கடந்த 2019ம் ஆண்டுக்கு பின் முழு நேர தலைவர் இல்லாததால் சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த காங்கிரசின் உட்கட்சி தேர்தல் மூலம் மல்லிகார்ஜூன கார்கே கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையே முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

வரும் 30ம் தேதி ஜம்மு - காஷ்மீரில் நடைபயணம் முடிவுக்கு வருகிறது. அதன் தொடர்ச்சியாக 9 மாநில சட்டப் பேரவை தேர்தல்கள் வரவுள்ளன. அதன்பின் 2024ல் நாடாளுமன்ற தேர்தலும் வருகிறது. காங்கிரசை வலுப்படுத்தவும், தேர்தலுக்கு ஆயத்தப்படுத்தவும் தலைமை ஆயத்தமாகி வருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘ஜனநாயக முறைப்படி காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அடுத்த மாதம் பிப்ரவரி 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடக்கிறது. தேசிய, மாநில தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்பர். அப்போது எதிர்கால தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்த மாநாட்டில் 6 விதமான விஷயங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். பொருளாதாரம் முதல் அரசியல் வரை, விவசாயம் முதல் சர்வதேசம் வரை ஒவ்வொரு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும். இந்த ஒவ்வொரு பிரச்னையிலும் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்படும்’ என்றார். முன்னதாக கடந்த ஆண்டு உதய்பூரில் நடந்த காங்கிரஸ் சிந்தன் ஷிவிர் கூட்டத்தில், கட்சியின் எதிர்கால திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் தற்போது ராய்ப்பூரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: