18ம் தேதி பூர்வாங்க பூஜைகள் துவக்கம்; பழநியில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்: 17 வருடங்களுக்கு பிறகு நடப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி

பழநி: பழநி கோயிலுக்கு 17 வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் இக்கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இதன்படி கடந்த 2018ம் ஆண்டு பழநி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நடத்தப்படவிலலை. பல்வேறு தரப்பினரும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பாலாலயம் நடந்தது.

ஆனால், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி கும்பாபிஷேக பணிகள் ஆமை வேகத்தில் நடந்தது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கும்பாபிஷேக பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார். இதன்பயனாக அறநிலையத்துறை அமைச்சர் பழநி கோயிலை ஆய்வு செய்து கும்பாபிஷேக பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடந்தன. ரூ.16 கோடியில் கட்டுமானம் மற்றும் அழகுபடுத்துதல் பணி நடைபெறுகிறது.

ரூ.5 கோடியில் வெள்ளி மற்றும் தங்கத்தால் மேற்கொள்ளப்படும் பணிகள் நடைபெறுகிறது. மொத்தம் 88 பணிகள் நடைபெறுகின்றன. இதில் 26 பணிகள் கோயில் நிர்வாகம் மூலமாகவும், 62 பணிகள் உபயதாரர்கள் மூலமாகவும் நடைபெறுகிறது. பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த 25ம் தேதி முகூர்த்தக்கால் நாட்டப்பட்டது. வரும் 18ம் தேதி கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் துவங்க உள்ளது. 23ம் தேதி முதற்கால வேள்வி துவங்குகிறது.

26ம் தேதி காலை 9.50 மணி முதல் 11 மணி வரை பாதவிநாயகர் முதல் இரட்டை விநாயகர் வரை உள்ள பரிவார சன்னதிகளுக்கு குடமுழுக்கு நடைபெறும். 27ம் தேதி காலை நடக்கிறது.

கும்பாபிஷேகத்தின் இறுதிப்பணியாக மூலவருக்கு மருந்து சாத்துதல் தொடர்பாக தற்போது ஆலோசனை நடந்து வருகிறது. பக்தர்கள் சிரமமின்றி குடமுழுக்கை தரிசிக்க கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீண்ட வருடங்களுக்கு பிறகு பழநி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவது பக்தர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் மொழியில் வருடாபிஷேகம்

பழநி அருகே பாலசமுத்திரத்தில் இருந்து பாலாறு-பொருந்தலாறு அணை செல்லும் வழியில் பீரங்கி மேடு எனும் பகுதியில் உள்ளது.முற்காலத்தில் சண்முகமங்கலம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படும் இப்பகுதியில் உள்ள சிவன்கோயில் கடந்த பல ஆண்டுகளாக பூஜைகள் ஏதும் நடத்தப்படாமல் சிதலமடைந்து கிடந்தது. இக்கோயிலை புனரமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து தற்போது இக்கோயிலை தன்னார்வலர்கள் சிலர் ஒன்றிணைந்து சீரமைத்து தமிழ்வழியில் கும்பாபிஷேகம் நடத்தினர். இக்கோயிலில் நேற்று வருடாபிஷேகம் மற்றும் நால்வருக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது.

இதனையொட்டி சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வர் பெருமக்களுக்கு வேள்வி வழிபாடு நடந்தது. தொடர்ந்து பேரொளி வழிபாடு, திருமஞ்சன வழிபாடு, திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, அனுமதி பெறுதல், திருமகள் வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு, வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம், மண்ணெடுத்தல், முளையிடுதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து அமுதீசுவரருக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பழநி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: