காஷ்மீரில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு, குண்டுவெடிப்பு அப்பாவி மக்கள் 6 பேர் பரிதாப பலி: தீவிரவாதிகள் வெறிச்செயலால் கிராம மக்கள் கொந்தளிப்பு

ஜம்மு: காஷ்மீரில் வீடுகளை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகள், அதே இடத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி தாக்குதல் நடத்தினர். இதில், 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகி உள்ளனர். ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் தாங்கிரி கிராமத்தில் புத்தாண்டு தினமான நேற்றுமுன்தினம் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். 3 வீடுகளை குறிவைத்து அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ப்ரீதம் லால் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காஷ்மீரில் சமீபகாலமாக குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பொதுமக்கள் மீதான இந்த துப்பாக்கி சூடு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி, ஜம்மு பிராந்தியத்தில் பல ஆண்டாக அமைதி நிலவி வரும் நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை மற்றும் போலீசாரின் கவனக்குறைவால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கிராமமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான ப்ரீதம் லால் வீட்டில் நேற்று துக்க நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்காக அவரது உறவினர்கள் பலரும் வீட்டில் கூடியிருந்தனர். அப்போது காலை 9.30 மணி அளவில் சக்திவாய்ந்த ஐஇடி வகை குண்டு, ப்ரீதம் லால் வீட்டின் அருகில் வெடித்துச் சிதறியது. சத்தம் கேட்டு கிராமமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.

இந்த தாக்குதலில் விகான் குமார் சர்மா என்ற 4 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. படுகாயமடைந்த சான்வி சர்மா (7) சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இவர்கள் இருவரும் உடன்பிறந்தவர்கள் ஆவார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது, சம்பவ இடத்தில் 2 தீவிரவாதிகளை பார்த்ததாக கிராமமக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 14 மணி நேரத்தில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியான சம்பவம் ரஜோரி மாவட்டத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலை கண்டித்து, பல பகுதிகளிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதலில் பலியானவர்களை சடலங்களை தகனம் செய்ய மறுத்த அவர்களது உறவினர்கள் பொது இடத்தில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலைக்குள் ஆளுநர் வராவிட்டால், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தங்களை சந்திக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என கிராமமக்கள் தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்த மூத்த போலீஸ் அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் வீணானது. இதையடுத்து நேற்று மாலை காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்கா ராஜோரி மாவட்டத்துக்கு நேரில் வந்து கொல்லப்பட்டவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், பாகிஸ்தான் தீவிரவாதிகளை கண்டித்து, விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் சிவசேனா உள்ளிட்ட அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் ஜம்முவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. தேசிய புலனாய்வு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* தற்காப்புக்கு மீண்டும் துப்பாக்கி தரப்படும்

கடந்த 1990ம் ஆண்டில் ஜம்முவின் செனாப் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை எதிர்த்து போராடுவதற்காக கிராம பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது. இவர்களுக்கு துப்பாக்கி பயிற்சி அளிக்கப்பட்டு, பாதுகாப்புக்காக துப்பாக்கி வழங்கப்பட்டது. தற்போது இந்த குழுவின் ஆயுதங்களை அதிகாரிகள் திரும்ப எடுத்துச் செல்லாமல் இருந்திருந்தால், இந்த தாக்குதலை தவிர்த்திருக்கலாம் என கிராமமக்கள் கூறி உள்ளனர். கிராம பாதுகாப்பு குழுவிடமிருந்து 60 சதவீத துப்பாக்கிகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக உள்ளூர் பாஜ தலைவர் கூறி உள்ளார். இதற்கிடையே போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த போலீஸ் டிஜிபி திக்பால் சிங், ‘‘கிராம பாதுகாப்பு குழுக்களுக்கு இப்போது புத்துயிர் அளித்து, மீண்டும் ஆயுதம் வழங்கப்படும்’’ என அறிவித்துள்ளார்.

* ரூ.10 லட்சம் நிதி உதவி அரசு வேலை அறிவிப்பு

தீவிரவாத தாக்குதல் தொடர்பாக பேசிய காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்கா தனது டிவிட்டர் பதிவில், ‘ரஜோரியில் நடந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கறேன். இந்த வெறுக்கத்தக்க தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நான் பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என உறுதி அளிக்கிறேன்’’ என அறிவித்துள்ளார்.

Related Stories: