4% அகவிலைப்படி அறிவிப்பு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முதல்வருக்கு நன்றி

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப் படியை உயர்த்தி அறிவித்த தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி  முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து  தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள், அரசு ஊழியர்கள் சங்கங்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றன.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2006ம் ஆண்டில் முதல்வராக இருந்த கலைஞர், 53 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை கால முறை ஊதியத்தின் கீழ் கொண்டு வந்தார். அந்த வழியில் புத்தாண்டை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அகவிலைப் படியை அறிவித்து  ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பாதுகாக்கும் அரசு திமுக அரசு என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளதற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இந்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வு 2023, ஜனவரி 1ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன் மூலம் 16 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஓய்வு ஊதியதாரர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளார். ஒன்றிய அரசுக்கு இணையான அகவிலைப் படி உயர்வு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மீண்டும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: