புதிய வகை கொரோனா பரவும் நிலையில் சீனாவில் புதுக்கோட்டை மருத்துவ மாணவர் பலி

புதுக்கோட்டை: சீனாவில் புது வகை கொரோனா பரவும் நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த மருத்துவ மாணவர் உயிரிழந்தார். புதுக்கோட்டை போஸ்நகரை சேர்ந்தவர் சையது அபுல்ஹாசன் சதாலி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சைனம்பூராணி. இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் சேக் அப்துல்லா(25), சீனாவின் ஜியான்ஹனா மாவட்டத்தில் கியூகார் மருத்துவ பல்கலை கழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பை 5 ஆண்டு படித்து முடித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்ததால் சொந்த ஊர் வந்த இவர், ஆன்லைன் மூலமாகவே படிப்பை முடித்தார்.

இந்நிலையில் மருத்துவ பயிற்சிக்காக கடந்த மாதம் 11ம் தேதி மீண்டும் சீனாவுக்கு சென்றார். அப்போது அங்கு புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதால், சேக்அப்துல்லாவுக்கும் பரிசோதனை நடந்தது. தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சேக் அப்துல்லா உடல்நிலை மோசமடைந்ததால், ஹர்பன் சிட்டி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி அவரது பெற்றோருக்கு பல்கலை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. பெற்றோர் தொடர்பு கொண்டபோது, ஷேக் அப்துல்லாவுக்கு கொரோனா இல்லை, கல்லீரல் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ செலவுக்கு தேவையான பணத்தை அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

அதன்படி தந்தை சையது அபுல்ஹாசன் சதாலி, உறவினர்களிடம் கடன் வாங்கி ரூ.6 லட்சத்து 40 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். இதுபற்றி கடந்த 26ம் தேதி மாவட்ட கலெக்டரிடமும், ஒன்றிய, மாநில  அரசுகளுக்கும் பெற்றோர்‌ கோரிக்கை மனு அனுப்பினர். இந்நிலையில்  ஷேக் அப்துல்லா நேற்று இறந்து விட்டதாக சீன  பல்கலைக்கழக நிர்வாக தரப்பில்  பெற்றோருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: