புத்தாண்டின் முதல் நாளிலேயே அதிரடி: வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

சியோல்: கடந்த ஆண்டில் 70 ஏவுகணை சோதனைகள் நடத்திய வடகொரியா  2023ம் ஆண்டின் முதல் நாளிலேயே ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளை மிரட்டியிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் கடும் மோதல் போக்கை வடகொரியா கடைபிடித்து வருகிறது.  பல நாடுகளின் எதிர்ப்பை எல்லாம்  கண்டுகொள்ளாத வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தொடர்ந்து அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறார். இதனால் வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்தது.

அமெரிக்காவின் பொருளாதார தடையால் வடகொரியா கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. எந்த விஷயம் பற்றியும்  கவலைப்படாத வடகொரிய அதிபர் கிம், தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறார்.  கடந்த ஆண்டு வடகொரியா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 70க்கும் மேற்பட ஏவுகணைகளை சோதித்து உள்ளது.

அதிலும், அமெரிக்கா வரையிலும் சென்று தாக்கக் கூடிய தொலை தூர ஏவுகணையை சோதனை செய்து அதிர வைத்தது.2022ம்  ஆண்டின் கடைசி நாளான நேற்றுமுன்தினம் 3 ஏவுகணைகளை வடகொரியா அடுத்தடுத்து சோதித்தது. இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்றும் வடகொரியா  ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 2. 50 மணி அளவில் பியோங் யாங்கில் இருந்து கிழக்கு கடல் பகுதியை நோக்கி குறுகிய தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசி சோதனை நடத்தியதாக தென்கொரியா கூட்டு படையினர் தெரிவித்து உள்ளனர்.

பாக்ஸ் அணு ஆயுதங்கள் அதிகளவில் தயாரிப்பு

ஏவுகணை சோதனைக்கு பின் நடந்த உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் கிம் ஜோங் பங்கேற்றார். கூட்டத்துக்கு பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தென் கொரியா, ஜப்பானுடன் இணைந்து நேட்டோ போன்ற  ராணுவ ஒத்துழைப்பை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.வட கொரியாவுடன் மோதலில் ஈடுபடும் விதமாக தென் கொரியாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இதனால் நாட்டில் அணு ஆயுதங்களை அதிகளவில் தயாரிக்க வேண்டும்.  பகைமை நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும்  வட கொரியாவின் நலனை பாதுகாக்கும் வகையில் ராணுவ பலம் இருமடங்காக அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: