திற்பரப்பில் குவியும் சுற்றுலா பயணிகள்: அருவியில் குளித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் தற்போது மழை இல்லாததால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் திற்பரப்பு பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அதிலும் தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை என தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாகவே திற்பரப்பு பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில் நேற்று காலை முதல் மாலை வரை சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் இருந்தனர். அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போடுகின்றனர்.

மேலும் அருவி அருகே உள்ள நீச்சல் குளத்தில் சிறுவர்கள், குழந்தைகள் என பலரும் குளித்து மகிழ்ந்தனர். அதேபோல் அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து கோதையாற்றின் இயற்கை அழகை ரசித்தனர். ஆனால் இங்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படகுகள் இயக்கப்படுவதாலும், அதிகளவில் மக்கள் குவிந்ததாலும் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை எதிரொலியாக வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் இடமில்லாமல் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இன்று புத்தாண்டு என்பதால், அதனை கொண்டாடுவதற்காக திற்பரப்பு அருவிக்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர தொடங்கியுள்ளனர். மக்கள் அதிகளவில் வருவதால் தற்காலிக கடைகளில் குழந்தைகளை கவரும் வகையில் ஏராளமான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வியாபாரம் களைகட்டி வருகிறது.

Related Stories: