சின்னாளபட்டி பேரூராட்சியில் அதிக குப்பைகளை ஏற்றிச்செல்லும் பேட்டரி வண்டிகள்: தூய்மை பணியாளர்கள் மகிழ்ச்சி

சின்னாளபட்டி: சின்னாளபட்டி பேரூராட்சியில் குப்பைகளை அள்ளவும், அவற்றை உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லவும் நவீன ரக பேட்டரி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று பேட்டரிகள் இணைத்திருப்பதால் அதிக எடைகளை கொண்டு செல்ல வசதியாக இருப்பதாக தூய்மை பணியாளர்கள் கூறியுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சிகளுக்கு வார்டுகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்கவும், அவற்றை உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லவும் பேட்டரி வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பேரூராட்சிகளுக்கு வழங்கப்பட்ட குப்பை வண்டிகள் தரமில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பல பேரூராட்சிகளில் தற்போது அவை செயல்படாமல் காட்சிப் பொருளாய் முடங்கியுள்ளன.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு அதிக எடையுள்ள குப்பைகளை கொண்டு செல்லவும், பராமரிப்பிற்கு எளிதான வகையிலும் மூன்று பேட்டரிகள் இணைக்கப்பட்ட வண்டிகளை வழங்கி வருகிறது. இந்த வண்டிகளில் அதிக எடையை தாங்கச்செல்லக்கூடிய அளவிற்கு ஷாக் அப்சார்பர் மற்றும் பெரிய அளவிலான டயர்கள் பொருத்தியுள்ளனர். இதன்படி சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு குப்பைகளை அள்ளவும், அவற்றை உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லவும் நான்கு நவீன ரக பேட்டரி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறும்போது, தற்போது வழங்கப்பட்டுள்ள குப்பை வண்டிகளில் அதிக எடையுள்ள குப்பைகளை கொண்டு செல்ல முடிகிறது.

இதனால் ஒரே இடத்திற்கு திரும்ப திரும்ப குப்பகைளை அகற்ற வரும் பணி குறைந்துள்ளது. ஒரு பகுதியில் உள்ள குப்பைகளை ஒரே நேரத்தில் அள்ளிச்செல்ல வசதியாக இருப்பதால் எங்கள் பணி விரைவாக நடக்கிறது என்றனர்.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் கூறுகையில் இதற்கு முன்பு வழங்கப்பட்ட குப்பை அள்ளும் வண்டிகள் முழுமையாக செயல்படவில்லை. ஆனால் தற்போது அதிக எடையுள்ள மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து கொண்டு செல்லும் வகையில் தரமாக வண்டிகளை வடிவமைத்துள்ளனர். மேலும் இந்த வண்டிகளில் தலா மூன்று பேட்டரிகளை இணைத்திருப்பதால் அதிக நேரத்திற்கு இயக்க முடிகிறது. பேட்டரிகளை தினந்தோறும் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் இத்தனை வசதிகள் இருந்தும் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட வண்டிகளை விட ரூ.50 ஆயிரம் வரை விலையும் குறைவாக கிடைத்துள்ளது என்றார்.

Related Stories: