அகிலேஷ் - அழைப்பில்லை; மாயாவதி - சஸ்பென்ஸ்: ராகுல் நடைபயணத்திற்கு ஸ்மிருதிக்கு அழைப்பு: சூடுபிடிக்கும் அமேதி தொகுதி அரசியல்

லக்னோ: ராகுலின் நடைபயணத்தில் பாஜக அமைச்சர்  ஸ்மிருதி இரானிக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், உத்தரபிரதேச அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைபயணம் வரும் 3ம் தேதி மீண்டும் டெல்லியில் இருந்து தொடங்குகிறது. அன்றைய தினம் காசியாபாத் வழியாக உத்தரபிரதேசத்திற்குள் நடைபயணம் நுழைகிறது. இந்த நடைபயணத்தில் கலந்து கொள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ்  கட்சித் தலைவர் மாயாவதி, ராஷ்ட்ரிய லோக் தளத் தலைவர் ஜெயந்த் சவுத்ரி  ஆகியோருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டதாக காங்கிரஸ் தலைவர்கள்  தெரிவித்தனர்.

ஆனால் ஜெயந்த் சவுத்ரி ராகுலின் நடைபயணத்தில் பங்கேற்க  மறுத்துவிட்டார்; அகிலேஷ் யாதவ் தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை  என்று கூறினார். மாயாவதி தரப்பில் இன்னும் எந்த பதிலும் அளிக்கவில்லை. அதனால் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. இந்நிலையில் அமேதி தொகுதியின் (2019 தேர்தலில் ஸ்மிருதியிடம் ராகுல் தோற்றார்) பாஜக எம்பியும், ஒன்றிய அமைச்சருமான ஸ்மிருதி இரானிக்கு காங்கிரஸ் சார்பில் நடைபயணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் எம்.எல்.சியுமான தீபக் சிங் கூறுகையில், ‘கட்சியின் மூத்த தலைவர்களின் ஆலோசனையின்படி, கவுரிகஞ்சில் உள்ள  அமைச்சர் ஸ்மிருதி இரானியின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அவரது செயலாளர் நரேஷ் சர்மாவிடம் ராகுல் நடைபயணத்திற்கான அழைப்பிதழ் ஒப்படைக்கப்பட்டது’ என்றார்.

* வரவேற்பு இருக்கு... ஆனால்!

கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், ராகுலின் நடைபயணம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறுகையில், ‘ராகுலின் நடைபயணத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் அதனை வாக்குகளாக மாற்றுவது என்பது சவாலான விஷயமாகும். அது தானாக நடந்துவிடாது. ராகுலின் நடைபயணத்தால் ஆளும் பாஜக அதிர்ந்து போய் உள்ளது. 2024ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து சவாலை எதிர்கொள்ள வேண்டிவரும். மக்களின் முன் ராகுலுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்க்கும் போது, அது அவரது செல்வாக்கை அதிகரித்துள்ளது என்பது எனது கருத்து’என்றார்.

Related Stories: