ஊட்டி ரோஜா பூங்கா சாலையில் கற்பூர மரங்கள் அகற்றாததால் நெரிசல்

ஊட்டி: ஊட்டி ரோஜா பூங்கா சாலையில் வெட்டப்பட்ட அபாயகர மரங்கள் சாலையோரங்களில் கிடத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.  ஊட்டி விஜயநகரம் பகுதியில் ரோஜா பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்காவிற்கு செல்லும் சாலையில் இருபுறமும் அபாயகர ராட்சத கற்பூர மரங்கள் வளர்ந்திருந்தன. மழை காலங்களில் சூறாவளி காற்று வீசும் போது அவை வேருடன் சாய்ந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் நீடித்து வந்தது. இதனை தொடர்ந்து அபாயகர மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இச்சாலையில் உள்ள 10க்கும் மேற்பட்ட கற்பூர மரங்கள் வெட்டப்பட்டன.

மரங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் உடனுக்குடன் அகற்றாமல் சாலையோரங்களில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் சாலையோரம் கிடத்தி வைக்கப்பட்டுள்ள ராட்சத மரத்துண்டுகளால் ரோஜா பூங்கா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையோரம் கிடத்தி வைக்கப்பட்டுள்ள மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: