சென்னை மாநகர பேருந்துகளில் உள்ள அவசர கால உதவி பட்டன் குறித்து பெண் பயணிகளுக்கு விழிப்புணர்வு: கோயம்பேடு மற்றும் பிராட்வே பஸ் நிலையங்களில் நடந்தது

சென்னை: சென்னை மாநகரப் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள அவசர பயன்பாட்டு பட்டன்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறை குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி மூலம் பெண்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் நிர்பயா நிதியின் மூலம் சென்னை மாநகர பேருந்துகளில் 1200 பேருந்துகளில் அவசரப் பயன்பாட்டு (பேனிக்) பட்டன்கள் தற்போது வரை பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி மாநகர பேருந்துக்குள் நான்கு இடங்களில் சிவப்பு நிறத்திலான பேனிக் பட்டன்கள், 3 கண்காணிப்பு கேமராக்கள், ஒரு ஒலிபெருக்கியும் பொருத்தப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்  மற்றும் பிராட்வே பேருந்து நிலையங்களில் தெருக்கூத்து கலைஞர்கள் மூலம்  மேளதாளம் இசைக்கப்பட்டு பேனிக் பட்டன் எனப்படும் அவசர பயன்பாட்டு பட்டன்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், பட்டன்களை அழுத்திய பிறகு போக்குவரத்து கழகம் சார்பில் உடனடியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பயணிகளுக்கு விளக்கப்பட்டது. பேருந்து பயணத்தின்போது பாலியல் சீண்டல்களை எதிர்கொள்ளும் பெண்கள் அல்லது திடீர் உடல் நலக்குறைவு ஏற்படுவோர் இந்த பட்டன்களை அழுத்தினால் பேருந்தில் உள்ள ஒலிப்பெருக்கியில் அலாரம் ஒலி எழும்பும்.

சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள மாநகர போக்குவரத்து கழகத்தின் கட்டுப்பாட்டு அறையில் குறிப்பிட்ட பேருந்தின் சிசிடிவி காட்சிகள் திரைக்கு வரும். அப்போது  பேனிக் பட்டன் அழுத்தப்படுவதற்கு  ஒரு நிமிடம் முன்பும், பட்டன்  அழுத்தப்பட்டற்கு பின்பும் ஒரு நிமிட  காட்சியும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள பணியாளர்கள் பார்க்கும் வகையில் தனித்து தெரியும். இதன் மூலம் பட்டன்களை அழுத்திய பயணிகளுக்கு சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட உதவிகளுக்கான தேவை ஏற்பட்டிருந்தால் பேருந்துக்குள் படம்பிடிக்கப்பட்ட குறிப்பிட்ட சிசிடிவி காட்சி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டு, உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்தின் ரோந்து வாகனம் மூலம் காவலர்கள் பேருந்தை வந்தடைவர் அல்லது பயணிக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும்.

சென்னை மாநகர பேருந்தில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பேனிக் பட்டன்கள் பொருத்தப்பட்டு வருகின்றன, இருப்பினும் பேனிக் பட்டன் குறித்த விழிப்புணர்வு பெரும்பாலான பயணிகளுக்கு இல்லாததால் சென்னை மாநகராட்சியின் ஏற்பாட்டில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று திருவான்மியூர், கிண்டி பேருந்து நிலையங்களில் நடைபெற உள்ளது. சென்னையில் தினமும் 3200 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், அவற்றில்  2800 பேருந்துகளில் பேனிக் பட்டன்களை பொருத்த மாநகர போக்குவரத்து கழகம் சார்பில்  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: