ஒவ்வொரு மாநிலத்திலும் பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் பேரணி: கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் வெற்றித் திட்டமான இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் தொடர்ச்சியாக ‘அரசியலமைப்பை பாதுகாப்போம்’ மற்றும் ‘கையோடு கை கோர்ப்போம்’ என்ற பிரசாரம் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். மேலிட பொறுப்பாளர் சிரிவல்ல பிரசாத் முன்னிலை வகித்தார். ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, மாநில துணை தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, குலாம் முகைதீன், எம்பிக்கள் விஷ்ணு பிரசாத், விஜய் வசந்த், எம்எல்ஏக்கள் அசன் மவுலானா, ராதாகிருஷ்ணன், பழனி நாடார், துரை சந்திரசேகர் மற்றும் மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், டில்லி பாபு, முத்தழகன், ரஞ்சன் குமார், செங்கம் குமார், டீக்காராம் மற்றும் நிர்வாகிகள் ஆலங்குளம் காமராஜ், தமிழ்செல்வன், சுமதி அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின், இந்திய ஒற்றுமைப் பயணம் ஜனவரி 26ம் தேதி காஷ்மீரில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நிறைவடைய இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, அன்றைய நாள் முதல் அரசியல் சட்டத்தை பாதுகாப்போம் மற்றும் கையோடு கை கோர்ப்போம் என்ற மாபெரும் பிரசார இயக்கத்தை முன்னெடுக்க அகில இந்திய காங்கிரஸ், தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு செயல் திட்டத்தை வகுத்தளித்திருக்கிறது. ஒவ்வொரு கிராமம் மற்றும் வாக்குச்சாவடியை உள்ளடக்கிய நடைபயணம் இரண்டு மாதங்கள் நடைபெற வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். நடைபயணத்தில் ராகுல்காந்தியின் முக்கிய செய்திகளை தாங்கிய கடிதத்தை வீடு வீடாகச் சென்று விநியோகிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உச்சகட்டமாக பிரியங்கா காந்தி தலைமையில் மாபெரும் மகளிர் பேரணி நடத்த வேண்டும். இந்த பேரணியில் மகளிர் கொள்கை விளக்க அறிக்கையை அவர் வெளியிடுவார். தமிழகத்தில் பிரச்சார இயக்கம் ஜனவரி 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதேபோல், மாவட்ட அளவில் ஜனவரி 15ம் தேதியிலிருந்து 30ம் தேதிக்குள் நிகழ்ச்சிகளை நடத்தி முடிக்க வேண்டும் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை முடக்கி வைத்திருக்கிற தமிழக ஆளுநருக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: