மூன்று ஆண்டு சட்டப்படிப்புக்கு பிஇ படித்தவர்கள் தகுதியானவர்களா? சட்ட பல்கலை.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பத்தாம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து, பொறியியல் படித்தவர்களும், மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கும்படி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 படிக்காமல், டிப்ளமோ முடித்து, பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த கோமதி என்ற மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்திய பார் கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பத்தாம் வகுப்புக்கு பின் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ படிப்பை முடித்து, பொறியியல் பட்டம் பெற்றவர்களும், மூன்றாண்டு சட்டப்படிப்பு படிப்பதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றே பார் கவுன்சில் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதி, இனி வரும் ஆண்டுகளில் சட்டப்படிப்பு தொடர்பான கொள்கை விளக்க குறிப்பில், பத்தாம் வகுப்புக்கு பின் டிப்ளமோ படித்து மூன்றாண்டுகள் பொறியியல் படித்தவர்களும் மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கும்படி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: