திருக்கோயில்களில் உழவாரப் பணி மேற்கொள்ள அனுமதி வழங்குவது தொடர்பாக செயல் அலுவலர்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் கடிதம்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை - திருக்கோயில்களில் முற்றோதல் நிகழ்ச்சி மற்றும் உழவாரப் பணி மேற்கொள்ள அனுமதி அறிவுரை வழங்குதல் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியதாவது:

திருக்கோயில்களில் உள்ள இறைவன் இறைவியை போற்றி இயற்றப்பட்ட திருமுறைகள் மற்றும் பாசுரங்கள் திருக்கோயில்களில் பக்தர்களால் தொன்றுதொட்டு பாடப்பட்டு வருகிறது. குறிப்பாக மார்கழி மாதத்தில் வைணவ திருக்கோயில்களில் திருப்பாவை மற்றும் சைவ திருக்கோயில்களில் திருவெம்பாவை உள்ளிட்ட பாசுரங்கள் பாடப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இதே போன்று பன்னிரு திருமுறைகள் பாடப்படும் முற்றோதல் நிகழ்ச்சி சைவ அமைப்புகளால் பல்வேறு திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் திருக்கோயில்களை தூய்மையாக பராமரிக்கும் உழவாரப் பணிகள் பக்தர்கள் மற்றும் தன்னார்வக் குழுவினர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவது இவ்வலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

2. திருக்கோயில்களில் பாசுரங்கள் பாடுவது, முற்றோதல் நிகழ்ச்சி நடத்துதல் மற்றும் உழவாரப் பணிகள் போன்றவற்றை இறைவனுக்கு செய்யும் தொண்டாக கருதி இவற்றிற்கு வழங்கப்படவேண்டும். உடனடியாக திருக்கோயில் நிர்வாகிகளால் அனுமதி

3. எனவே, திருக்கோயில்களில் முற்றோதல், பாசுரங்கள் பாடுதல் போன்ற ஆன்மிக நிகழ்ச்சி மற்றும் உழவாரப் பணிகளுக்கு அனுமதி கோரி பக்தர்கள், தன்னார்வலர்களை மற்றும் ஆன்மிக அமைப்புகளிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து மூன்று தினங்களுக்குள் கீழ்குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி வழங்கிட திருக்கோயில் நிர்வாகிகளை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1. மேற்கண்ட நிகழ்வுக்காக பொதுமக்களிடமிருந்து நன்கொடை ஏதும் வசூல் செய்யக் கூடாது.

2. திருக்கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு இடையூறின்றி நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்.

3. நிகழ்ச்சி நடத்துபவர்கள் திருக்கோயிலில் முன்னுரிமை ஏதும் கோரக்கூடாது.

4. திருக்கோயிலின் பழக்க வழக்கத்திற்குட்பட்டு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்.

5. திருக்கோயிலில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்.

6 திருக்கோயிலின் தினசரி பூஜை மற்றும் திருவிழாக்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அதற்கு இடையூறின்றி நடத்திட அனுமதி வழங்கப்பட வேண்டும்.

7. திருக்கோயிலில் முற்றோதல் நிகழ்ச்சிக்கான செலவினங்கள் ஏதும் இருப்பின் அதனை நிகழ்ச்சி நடத்துபவர்களே ஏற்க வேண்டும்.

8. உழவாரப் பணிகள் திருக்கோயிலால் அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் நாட்களில் மட்டுமே மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.

இச்சுற்றறிக்கையினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து திருக்கோயில்களின் செயல் அலுவலர் / அறங்காவலர் / தக்கார் / நிர்வாகி / ஆய்வர் ஆகியோருக்கு அனுப்பி வைத்திட மண்டல இணை ஆணையர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: