எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 4 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

வேதாரண்யம்: மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள்பேட்டையை சேர்ந்தவர் பாண்டியன்(46). வானகிரியை சேர்ந்த சக்திவேல்(20), மற்றொரு சக்திவேல்(40), பரங்கிப்பேட்டையை சேர்ந்த திருச்செல்வம்(25). இவர்கள் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தங்கி மீன் பிடித்து வந்தனர். இந்நிலையில் பாண்டியனுக்கு ெசாந்தமான நாட்டுப்படகில் பாண்டியன் உட்பட 4 பேரும், கோடியக்கரையில் இருந்து மீன் பிடிப்பதற்காக கடந்த 27ம் தேதி கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.

நேற்று வேதாரண்யத்தின் தென்கிழக்கே இந்திய கடல் எல்லை அருகே நடுக்கடலில் மீன்களை பிடிப்பதற்காக வலையை விரித்து வைத்திருந்தனர். சிறிது நேரத்தில் மீனவர்களின் வலை காணாமல் போனது. இதனால் வலையை தேடியவாறு நாட்டுப்படகில் சென்றனர். அப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் பாண்டியன் உட்பட 4 பேரையும் கைது செய்தனர். மேலும் நாட்டுப்படகையும் பறிமுதல் செய்தனர்.இதைதொடர்ந்து 4 பேரையும் இலங்கை வல்வெட்டித்துறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 4 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம், மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: