பொங்கலுக்கு அரசு பணமாக கொடுப்பதால் வணிகம் செழிக்கும்: விக்கிரமராஜா பேட்டி

சென்னை: பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்களுக்கு தமிழக அரசு பணம் கொடுப்பதை வரவேற்கிறோம் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் வர்த்தகர் பொது நலச்சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளிவிழா நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொரோனா தொற்று பரவி வருவதாக ஊடகங்கள் மூலம் அறிகிறோம். குறிப்பாக, வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை அங்கேயே தனிமைப்படுத்தி சோதனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கேட்டுக்கொள்கிறது. கோயம்பேடு மார்க்கெட் வணிகர்களை பொறுத்தவரை எந்த சூழ்நிலையிலும் முதலமைச்சர் வணிகர் சங்கங்களை அழைத்து ஆலோசனை பெற்றுத்தான் முடிவெடுப்பார் என நம்புகிறோம். பொங்கல் பரிசாக அரசு பணம் கொடுப்பதை வணிகர் சங்க பேரமைப்பு உள்ளப்பூர்வமாக வரவேற்கிறது. பொங்கலுக்கு அரசு பொருள் கொடுத்தால் வியாபாரம் பாதிக்கும். பணம் கொடுப்பதால் வணிகம் செழிக்கும் என்றார்.

Related Stories: