யாரும் எதிர்பார்க்காத வகையில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு; விழாவை முதல்வர் நடத்துகிறார்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

தண்டையார்பேட்டை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மொழிப்போர் களம்கண்ட தமிழ் வீரம்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் மண்ணடி தம்புச் செட்டி தெருவில் நடைபெற்றது. துறைமுகம் கிழக்கு பகுதி திமுக செயலாளர் ராஜசேகர் தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன் ஆகியோர் பேசினர். இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது;

இன்றைக்கு பேராசிரியர் இருந்திருந்தால் அவரும் நம்மோடு இந்த நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்திருப்பார். ஆனால் அந்த வாய்ப்பு ஏற்படாமல் போய்விட்டது. இருந்தாலும் பேராசிரியரின் நூற்றாண்டு நிறைவை யாரும் எதிர்பார்க்காத வகையில் நடத்தி கொண்டிருக்கிறார் நம்முடைய முதலமைச்சர். அவருடைய அர்ப்பணிப்பு எந்தளவுக்கு இருக்கிறது என்று சொன்னால், பேராசிரியரின் உருவசிலை செய்யும் இடத்திற்கு சென்று அவரே பார்வையிட்டு அதன் நேர்த்தியை உறுதி செய்துவிட்டு வந்தார்.

சமச்சீர் கல்வியை செதுக்கி சிறப்பாக வர முத்தாய்ப்பு காட்டியவர் பேராசிரியர்.  சட்டப்போராட்டம் நடத்தி சமச்சீர் கல்வியை  செயல்பாட்டுக்கு கொண்டுவர செய்தவர் கலைஞர். சமச்சீர் கல்வியை உருவாக்கி தந்த பேராசிரியருக்கு  முதலமைச்சர்  பெரிய சிறப்பு செய்துள்ளார். அவரது வழியில் இன்றைக்கு திராவிட மாடல் அரசு அச்சுப்பிசகாமல் செயல்பட்டு வருகிறது.  இவ்வாறு அமைச்சர் பேசினார். இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி 5வது மண்டலக்குழு தலைவர் ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள், பகுதி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: