பெண்கள் கல்விக்கு பல்வேறு திட்டம்; தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்துகிறார்: அமைச்சர் பொன்முடி பேச்சு

துரைப்பாக்கம்: பெண்கள் கல்வியில் உயரவேண்டும் என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என்று அமைச்சர் பொன்முடி பேசினார். சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி 195வது வட்ட திமுக சார்பில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவுவிழா பொதுக்கூட்டம் மேட்டுக்குப்பம் பல்லவன் குடியிருப்பு பஸ் நிறுத்தம் அருகில் நடைபெற்றது.  

மாநகராட்சி 195வது வார்டு கவுன்சிலரும் 195வது வட்ட செயலாளருமான க.ஏகாம்பரம் தலைமை வகித்தார். எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், சோழிங்கநல்லூர் கிழக்குப் பகுதி செயலாளரும் 15வது மண்டல குழு தலைவருமான வி.இ.மதியழகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எம்.கே.ஏழுமலை முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதிகள் கலைச்செல்வன், சந்திரபாபு, திருப்பதி ராஜன், வட்ட துணை செயலாளர் விஜயகுமார், வட்ட அவைத்தலைவர் சம்பத்குமார், விஜயா, பூராஜன் ஆகியோர் வரவேற்றனர்.

இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், எம்எல்ஏக்கள் கணபதி, ஏ.வி.எம்.பிரபாகரராஜா, மாநில இலக்கிய அணி தலைவர் கவிதை பித்தன்,  தலைமை சட்டத் திருத்த குழு செயலாளர் பாலவாக்கம் சோமு, மாவட்ட அவைத் தலைவர் குணசேகரன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது; உலகத்திலேயே மிகச் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். திராவிட மாடல் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. தான் முதல்வராக இருந்தால் மட்டும் போதாது என்று அயராது பாடுபட்டு இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வந்துள்ளார்.  திராவிட  இயக்கத்தின் வரலாறு, சமூக சீர்திருத்த கருத்துக்களை இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் மகளிருக்கு எடுத்து சொல்லும் நோக்கத்துடன் கூட்டம் நடைபெறுகிறது.

பெண்கள் கல்வியில் உயரவேண்டும் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. பேராசிரியர் பகுத்தறிவு சிந்தனைகளை பரப்புகிற உணர்வோடு செயல்பட்டார். முதல்வர் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் பேராசிரியர். கொரோனா காலத்தில் முதலமைச்சர் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் வழங்கினார். அதுமட்டுமின்றி மகளிருக்கு இலவச பேருந்து பயண வசதியை கொண்டு வந்தார். தமிழகத்தில்தான் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீதம் இட ஒதுகீடு செய்துள்ளார். இவ்வாறு பேசினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, ‘’பேராசிரியர், கலைஞருடன் நெருங்கி பழகி  இயக்கத்தை வளர்த்திருக்கிறார். பேராசிரியர், கலைஞர் இவர்களுக்குள் இருந்த  நட்பு இன்றும் பேசப்படுகிறது. வரும் 9ம் தேதி தமிழர்  திருநாளை முன்னிட்டு  சென்னை தெற்கில் பிரமாண்ட கிரிக்கெட் திருவிழா நடத்துகிறோம். இதில் 3  ஆயிரம் அணிகளும், 33 ஆயிரம் வீரர்களும் ஒரு வாரமாக விளையாட  தொடங்கி யுள்ளனர்.

இதில் 17 முதல் 30 வயது வரையுள்ள இளைஞர்கள்  பங்கேற்கின்றனர். முதல் முறையாக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மாவட்ட  அளவில் முதல் பரிசு ரூ.2 லட்சமும், 2ம் பரிசு 1 லட்சம் மற்றும் பகுதி  வாரியாக 13 அணிகளுக்கு 20 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் என்ற பரிசு வழங்க  உள்ளார். வட்ட செயலாளரும் 195வது கவுன்சிலருமான ஏகாம்பரம் எதுசெய்தாலும்  சிறப்பாக இருக்கும்’ என்றார்.

Related Stories: