புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி தீண்டாமையை உடைத்தெறிந்த சிங்க பெண் அதிகாரிகள்: தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்து சென்று சாமி தரிசனம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பல ஆண்டுகளாக சாமி கும்பிட அனுமதி மறுக்கப்பட்ட தலித் மக்களை, அய்யனார் கோயிலுக்குள் கலெக்டர் அழைத்து சென்றதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர், வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்களின் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள குழந்தைகளுககு உடல் நிலை பிரச்னை ஏற்படவே பரிசோதனையில் குடிநீர்தான் காரணம் என தெரியவந்தது. அங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மேல் ஏறி கிராமத்தினர் பார்த்தபோது  மனித மலம் மிதந்தது தெரியவந்தது.

தகவலறிந்து சென்ற அதிகாரிகள் குடிநீர் முழுவதையும் அகற்றி, தொட்டியை கழுவி புதிதாக தண்ணீர் ஏற்றப்பட்டது. இதுதொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் நேற்று மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, எஸ்பி வந்திதா பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள், வருவாய்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் வந்து பார்வையிட்டனர். அப்போது அங்கிருந்த மக்கள் இறையூர் கிராமத்தில் உள்ள டீ கடையில் இரட்டை குவளை முறை இருப்பதாக தெரிவித்தனர்.

அந்த டீ கடைக்கு சென்ற கலெக்டர் கவிதா ராமு விசாரணை நடத்தினார். பின்னர் கடைக்காரர் மூக்கையா(57) கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள அய்யனார் கோயிலுக்குள் பல ஆண்டுகளாக சாமி கும்பிடுவதற்கு தலித்துகளை அனுமதிப்பதில்லை என மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால், தலித் மக்களை அழைத்துக்கொண்டு அய்யனார் கோயிலுக்குள் கலெக்டர் கவிதா ராமு, எஸ்பி வந்திதா பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் சென்று சாமி கும்பிட வைத்தனர். அப்போது எரையூர் கிராமத்தை சேர்ந்த சிங்கம்மாள் (35) சாமியாடுவதுபோல் தகாத வார்த்தையில் பேசியுள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: