மண்பாண்ட தொழிலாளர்கள் 11,676 பேருக்கு மழைக்கால பராமரிப்பு தொகை ரூ.5000 வழங்க நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

சென்னை: மழை காலங்களில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால  பராமரிப்பு தொகையாக தலா ரூ.5000 வீதம் நடப்பாண்டில் 11,676 பேருக்கு  ரூ.5.84 கோடி விரைவில்  வழங்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரிய அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் நேற்று கதர் மற்றும் பனை வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறையின் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் செயல்பாடுகளின் தலைமை செயல்  அலுவலர் சங்கர் மற்றும் நிதிநிலை ஆலோசகர், துணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்கள் உடனிருந்தனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியாதாவது: ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் பொதுமக்கள், பணிக்கு செல்லும் பெண்கள் ஆகியோரை கவரும் வகையில் புத்தம் புது வடிவமைப்புகள், வண்ணங்களில் காட்டன் புடவைகள், பட்டுப்புடவைகள் மற்றும் ஆண்களுக்கான உடைகள் ஆகியவற்றை தொடர்ந்து தயாரித்து விற்பனை செய்யவேண்டும். கதர் வாரியத்தில் உள்ள நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் நூற்பு, நெசவு பணிகளை செயல்படுத்திட வேண்டும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள் மதிப்புக்கூட்டு தேன் பொருட்கள், பாரம்பரிய மரச் செக்கு எண்ணெய் வகைகள், சிறுதானியங்கள் ஆகியவைகள் மக்களை கவரும் வண்ணம் இருப்பதால் இதன் உற்பத்தியை அதிகப்படுத்தி விற்பனையை விரிவுபடுத்திட வேண்டும்.

2022-23க்கு ரூ.60 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்ததில், நவம்பர் 2022 வரை ரூ.30.61 கோடி மதிப்பிலான கதர் கிராம பொருட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மழை காலங்களில் மண்பாண்ட தொழிலாளர்களின்  இன்னல்களை போக்கிட மழைக்கால பராமரிப்பு தொகையாக தலா ரூ.5000 வீதம் நடப்பாண்டில் 11,676 பேருக்கு ரூ.5.84 கோடியை விரைவில்  வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று, மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இந்த வருடம் வழங்க வேண்டிய 2175 மின் விசை சக்கரங்களுக்கான உற்பத்தி பணிகளை விரைவில் துவக்கி முடித்திட வேண்டும். மருத்துவ குணம் கொண்ட பதநீரை மூல பொருளாக கொண்டு பனை வெல்லம், பனஞ்சீனி,  பனங்கற்கண்டு, பனங்கற்கண்டு மிட்டாய், பனை வெல்ல சாக்லேட் மற்றும் பனம் பழங்கூழ் போன்ற பல்வேறு உணவு பொருட்களின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டும். இந்த நிதி ஆண்டுக்குள் ரூ.20கோடி அளவில் விற்பனை செய்திட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: